பஞ்சாப் கிங்ஸ் சிக்ஸர் மழை: குஜராத்துக்கு 244 ரன்கள் இலக்கு | GT vs PBKS | Punjab Kings rained sixer set 244 runs target to GT ipl 2025
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்து வீச முடிவு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.
5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார் பிரப்சிம்ரன் சிங். தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட் செய்ய வந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் பிரியான்ஷும் ஸ்ரேயாஸும். பிரியான்ஷ், 23 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை அவர் விளாசினார். தொடர்ந்து பேட் செய்ய வந்த அஸ்மதுல்லா 16, மேக்ஸ்வெல் 0, ஸ்டாய்னிஸ் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
7-வது பேட்ஸ்மேனாக ஷஷாங் சிங் களத்துக்கு வந்தார். ஸ்ரேயாஸ் உடன் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் அவர். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தனர். ஸ்ரேயாஸ், 42 பந்துகளில் 97 ரன்களை விளாசினார். 5 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களை அவர் விளாசினார். ஷஷாங், 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை அவர் விளாசினார்.
மொத்தமாக இந்த இன்னிங்ஸில் 16 சிக்ஸர்களை பறக்கவிட்டு இருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. குஜராத் அணியில் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் மட்டுமே 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மற்ற பவுலர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தனர். தற்போது குஜராத் அணி 244 ரன்கள் என்ற இலக்கை விரட்டுகிறது.