இர்ஃபான் பதான் நீக்கமா? – ஐபிஎல் 2025 வர்ணனையாளர் குழு சர்ச்சையும் பின்னணியும் | does Irfan Pathan removed from IPL 2025 commentator panel
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான வர்ணனையாளர் குழுவில் இருந்து இர்ஃபான் பதான் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரான அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே வர்ணனையாளராகப் பணியாற்றினார். ஆனால், அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் என்பது பிராண்ட், அதற்குச் சாதகமாகவே, அதன் ஐகான் வீரர்களுக்கும் ஐகான் அணிகளுக்கும் சாதகமாகவே வர்ணனையாளர்கள் பேச வேண்டும். தோனி, கோலி, ரோஹித், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல், ஷுப்மன் கில் என்று சில வீரர்கள் சொதப்பினாலும் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வர்ணனையாளர்கள் வைக்கக் கூடாது என்பது எழுதாத விதியாக இருக்கலாம்.
ஏற்கெனவே 5 ஆண்டுகளுக்கு முன்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கரை நீக்கினர். 2016-ல் ஹர்ஷா போக்லே நீக்கப்பட்டார். இந்த முறை இர்ஃபான் பதானும் நீக்கப்பட்டதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, இர்ஃபான் பதானுக்கும் பெயர் குறிப்பிடாத இரண்டு வீரர்களுக்கும் இடையே சச்சரவு உள்ளதாகவும், இதனால்தான் அந்த இரு வீரர்களையும் இர்ஃபான் பதான் கடுமையாக விமர்சிக்கிறார் என்றும் உணரப்பட்டதால் நீக்கப்பட்டதாக செய்தி ஒன்றில் காரணம் கூறப்பட்டுள்ளது.
அந்த இரண்டு வீரர்களையும் சில ஒலி வடிவ பேட்டிகளிலும், சமூக ஊடகத்திலும் இர்ஃபான் பதான் பெயரைக் குறிப்பிடாமல் தாக்குகிறார் என்று தெரியவந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. சில வீரர்களுக்கு எதிராக வேண்டுமென்றே பாரபட்சம் காட்டியதாக இர்ஃபான் பதானின் நீக்கத்துக்கு காரணம் என சில தகவல்கள் கூறுகின்றன.
ஐபிஎல் என்பது கிரிக்கெட்டை வைத்து கட்டப்படும் பிராண்ட். ஆகையினால், அதன் வணிக தர்மங்களைக் சீர்குலைக்கும் நோக்கில் பேசக் கூடாது. அதற்காக விளம்பர நோக்கில் பேச வேண்டாம் என்றாலும், சர்ச்சைக்குரிய விமர்சனங்களை ஊடகக் கூட்டாளியாக இருந்து கொண்டு செய்ய முடியாது என்பதே வாதமாக இருக்கும்.
ஆனால், வர்ணனை என்பது ஆங்கிலமாக இருந்தாலும் தமிழாக இருந்தாலும் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூற அனுமதி இல்லை. அது சாதாரண விமர்சனமாக இருந்தாலும் சரி ஆட்டம் குறித்த தவறுகளாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் வீரர்களையோ, ஐபிஎல் நடுவர் தீர்ப்புகளையோ, போட்டிகளின் ஓர்மையையோ விமர்சிக்கும் சர்ச்சைக்குரியதாக இருக்கக் கூடாது என்பதுதான்.
சச்சின் டெண்டுல்கர் தன் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றபோது இயன் சாப்பலை வர்ணனைக்கு பிசிசிஐ அழைத்தது. ஆனால், இயன் சாப்பல் வரவில்லை. அவர் வர மறுத்ததன் காரணத்தை பிற்பாடு அவரே ஊடகம் ஒன்றில் கூறுகையில், சச்சின் டெண்டுல்கரைப் பாராட்டித்தான் பேச வேண்டும். விமர்சனம் செய்யக் கூடாது என்பது போன்ற சூசகமான நிபந்தனை வைக்கப்பட்டதால் மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார். ஆகவே, இது ஒன்றும் புதிதல்ல.