‘குட் விஷன்!’ – தோனியின் ஸ்டம்பிங்கை புகழ்ந்த மேத்யூ ஹேடன் | Matthew Hayden praises Dhoni s lightning stumping for csk ipl 2025
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கை புகழ்ந்துள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்யூ ஹேடன்.
43 வயதான தோனி, விளையாட்டு களத்தில் தனது இறுதி அத்தியாயத்தை எட்டி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். 5 முறை சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் பட்டம் வென்று கொடுத்த கேப்டனான தோனி, தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தொடர்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தற்போது விளையாடாத நிலையிலும் அவரது விக்கெட் கீப்பிங் திறன் அபாரமாக உள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் செயல்பட்டார்.
நூர் அகமது வீசிய 11-வது ஓவரில் பெரிய ஷாட் ஆட முயன்றார் மும்பை வீரர் சூர்யாக்குமார் யாதவ். ஆனால், பந்து நன்றாக திரும்ப அதை அவர் மிஸ் செய்தார். ஸ்டம்புக்கு பின்னால் நின்ற தோனி பந்தை அப்படியே பற்றி, 0.12 விநாடிகளில் ஸ்டம்புகளை தகர்த்தார். சூர்யகுமார் யாதவ், தனது பேட் வீச்சை நிறைவு செய்வதற்குள் தோனி அவரை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றிவிட்டார். முக்கிய தருணத்தில் அந்த விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
தோனியின் துல்லிய செயல்பாட்டை பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். அந்த பட்டியலில் ஹேடனும் இணைந்துள்ளார். “அவருக்குள் அந்த ஃபயர் இன்னும் அப்படியே இருக்கிறது. நூர் அகமது பந்தை லெக் திசையில் வீசிக் கொண்டிருந்தார். பேட்ஸ்மேன் முன்னாள் இருப்பதால் பகுதி அளவில் மறைக்கப்பட்டிருக்கும் நிலையில் பந்தை பிடித்து ஸ்டம்ப் செய்தது அபாரம். அதில் குயிக் டைமிங், குட் விஷன் மாதிரியானவை அடங்கி உள்ளது” என ஹேடன் தெரிவித்துள்ளார்.
“ஸ்டம்புகளுக்குப் பின்னால் தோனி போன்ற ஒருவர் இருப்பது எனக்கு நல்ல சப்போர்ட்டாக அமைந்துள்ளது. அவர் சூர்யகுமாரை ஸ்டம்பிங் செய்த விதம் அபாரம்” என ஆட்டத்துக்கு பிறகு நூர் அகமது தெரிவித்தார்.