”நான் விரும்பும் வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன்!” – தோனி ஓபன் டாக் | Can play for CSK as long as I want says dhoni ipl 2025
சென்னை: நான் விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்னால் தொடர்ந்து விளையாட முடியும் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். அவரது ஓய்வு குறித்த பேச்சு வைரலாகி உள்ள நிலையில் ஜியோஹாட்ஸ்டார் நேர்காணலில் இதை தோனி கூறியுள்ளார்.
தான் வீல் சேரில் இருந்தாலும், சிஎஸ்கே அணி தன்னை விளையாட களத்துக்கு இழுத்து வந்துவிடும் என்று வேடிக்கையாக தோனி பேசியுள்ளார். 43 வயதான அவர் கடந்த ஐபிஎல் சீசன் முதல் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அணியில் விளையாடி வருகிறார். ஆட்டத்தின் கடைசி சில ஓவர்களில் பேட் செய்ய களம் கண்டு, சிக்ஸர் விளாசுவது அவரது ஆட்ட பாணியாக உள்ளது.
“இது என்னுடைய ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணி. நான் விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்னால் தொடர்ந்து விளையாட முடியும். நான் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் என்னை விளையாட இழுத்து வந்து விடுவார்கள்” என தோனி கூறியுள்ளார்.
கடந்த 2023 சீசனில் அவரது தலைமையிலான சிஎஸ்கே அணி 5-வது முறையாக ஐபிஎல் பட்டம் வென்றது. அதன் பின்னர் கடந்த சீசனில் அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் வசம் தோனி ஒப்படைத்தார். அணியில் விக்கெட் கீப்பராக விளையாடி வரும் தோனி, தனது ஓய்வு குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தோனியின் தற்போதைய வெளிப்படை பேச்சு அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் தந்துள்ளது. சென்னை அணியின் ஆன்மாவாக அவர் விளங்கி வருகிறார். அவரது கிரிக்கெட் எதிர்காலம் எப்படி என யாரும் கணிக்க முடியாது. ஆனால், தோனி எனும் கிரிக்கெட் ஜாம்பவானின் தாக்கம் என்றென்றும் சிஎஸ்கே அணியில் இருக்கும்.