EBM News Tamil
Leading News Portal in Tamil

‘பும்ரா, ஹர்திக் இடத்தை நிரப்புவது கடினம்’ – சூர்யகுமார் யாதவ் | CSK vs MI | ipl 2025 difficult to fill shoes of hardik bumrah in mi team says sky


சென்னை: “முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இல்லாதது சவாலானது. அணியில் அவர்களது இடத்தை நிரப்புவது கடினமானது” என மும்பை இந்தியன்ஸ் அணியின் மாற்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் தடை காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளது. வலுவான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள சென்னை அணியை எதிர்த்து மும்பை விளையாடுகிறது. இந்நிலையில், போட்டிக்கு முன்னதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்தது:

“பும்ராவை மிஸ் செய்கிறோம். ஹர்திக் அணியுடன் தான் இருக்கிறார். ஆனால், முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை. அணியில் அவர்கள் இருவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினமானது. இது விளையாட்டின் ஒரு பகுதி. இருந்தாலும் அணியில் உள்ள மற்ற வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டி உள்ளது.

அணியில் இந்த முறை அபார வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அனுபவமும் உள்ளது. திறமையான வீரர்களை அடையாளம் கண்டு வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக அந்த பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளது. நானும், திலக் வர்மாவும் பேட்டிங் ஆர்டரில் இந்த சீசனில் மாறி மாறி விளையாட வாய்ப்பு உள்ளது. இந்த சீசனில் முதல் போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சை வெறும் சிக்ஸர்களாக விளாசி பதிலடி கொடுக்க உள்ளோம்.

இத்தனை வருடங்களாக தோனியை யாராலும் கட்டுப்படுத்த முடிந்ததா? சென்னையில் போட்டிக்காக வரும் போதெல்லாம் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து அவர் வெளியே வருவதை பார்த்து நான் மகிழ்ந்தது உண்டு. அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை அறிய முடியும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை நாங்கள் செய்கிறோம். அதே நேரத்தில் அவருக்கு எதிராக போட்டியில் எங்கள் அணியை நான் வழிநடத்துகிறேன்.” இவ்வாறு சூர்யகுமார் கூறியுள்ளார்.