அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான தனது நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார்.
2018 முதல் கடந்த 2024 ஐபிஎல் சீசன் வரையில் அவர் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அதன் மூலம் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். அந்த அணிக்காக 87 போட்டிகள் விளையாடி, 83 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்நிலையில், இந்த சீசனை முன்னிட்டு நடைபெற்ற மெகா ஏலத்துக்கு முன்னதாக அவர் ஆர்சிபி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் ஏலம் சார்ந்த கணக்குகள் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கு முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒரு சீசன் (2017) விளையாடி இருந்தார்.
இந்த நிலையில் ஆர்சிபி அணி குறித்து சிராஜ் பேசியுள்ளார். “ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறியது மிகவும் உணர்வுபூர்வமானது. எனது கிரிக்கெட் வாழ்வில் சகோதரர் விராட் கோலிக்கு முக்கிய பங்குண்டு. மிகவும் கடினமான சூழலில் என் பக்கம் நின்று ஆதரவு கொடுத்தார். அணியில் நான் தக்கவைக்கப்பட காரணமும் அவர்தான். அதன் பிறகுதான் எனது செயல்பாடு மேம்பட்டது.” என சிராஜ் கூறியுள்ளார். ஏப்ரல் 2-ம் தேதி ஆர்சிபி அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் விளையாட உள்ளது. அந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து, “கடந்த ஆண்டு பழைய பந்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 10 வேகப்பந்து வீச்சாளர்களில் நானும் ஒருவன். எனது எக்கானமி ரேட்டும் குறைந்த அளவில் தான் இருந்தது. எனது செயல்பாடு சான்றாக உள்ளது. புதிய மற்றும் பழைய பந்துகளில் திறம்பட பந்து வீசி உள்ளேன்” என அவர் தெரிவித்தார்.