இந்திய அணி வீட்டுல ‘புலி’ வெளியில ‘எலி’ – பென் டக்கெட் சூசக விமர்சனம் | Indian cricket team is a tiger at home, a rat away – Ben Duckett
ஐபிஎல் 2025 தொடர் முடிந்தவுடன் அடுத்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி, இங்கிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இது தொடர்பாக இங்கிலாந்தின் அதிரடி இடது கை தொடக்க வீரர் பென் டக்கெட் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதோடு பும்ராவையும் சீண்டிப் பார்த்துள்ளார் பென் டக்கெட். அதாவது, பும்ரா ஒரு பெரிய சவால்தான், ஆனால் தனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த வித வியப்பையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தும் அளவுக்கு அவரிடம் ஒன்றும் புதிதாக இல்லை என்ற ரீதியில் பேசிச் சீண்டியுள்ளார்.
வணிக நலன்கள் மிக்க டி20, ஒருநாள் போன்ற வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தாதாவாக ஏறத்தாழ வீழ்த்த முடியாத அணியாக இந்திய அணி 2011 உலகக் கோப்பைக்குப் பிறகே எழுச்சி பெற்றுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி வருகிறது. ஆனாலும், இங்கிலாந்து இங்கு வந்து ஆடுவதை விட, இங்கிலாந்து வெளிநாடுகளில் ஆடுவதை விட மற்ற துணைக் கண்ட அணிகளை ஒப்பிடும்போது இந்திய அணி வரலாற்று ரீதியாக கொஞ்சம் பரவாயில்லை என்றே ஆடிவருகிறது என்பதற்கு புள்ளி விவரங்கள் துணை எப்போதும் உள்ளது.
இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பென் டக்கெட் கூறியது: “இந்தியா தங்கள் சொந்த நாட்டில் ஆடும்போது வேறு அணி, வெளிநாட்டில் ஆடும்போது அப்படியல்ல. இந்திய அணியை நாம் தோற்கடிக்க வேண்டும், தோற்கடிக்கக் கூடிய அணியே என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால், நல்ல ஒரு டெஸ்ட் தொடராக அது அமையும்.
இந்திய அணி பும்ராவின் பவுலிங்கைச் சுற்றியே உள்ளது. நான் அவரை 5 டெஸ்ட் தொடரில் இதற்கு முன் ஆடியுள்ளேன். அவர் எனக்காக என்ன வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். அவரிடம் உள்ள திறமைகள் என்ன என்பதை நான் தெரிந்தே வைத்திருக்கிறேன்.
என்னை அவர் ஆச்சரியத்திற்குள்ளாக்க முடியாது. மிகவும் சவாலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இவருடன் முகமது ஷமியும் அவரைப் போலவே அச்சுறுத்தல் தரும் பவுலர். புதிய பந்தில் வீசும் ஸ்பெல்லை எதிர்கொண்டு கடந்து விட்டால் அதன் பிறகு ரன்களைக் குவிக்கலாம் என்றே கருதுகிறேன்” என்று கூறியுள்ளார் பென் டக்கெட்.