சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன் | Suryakumar Yadav to captain Mumbai against CSK
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்க முடியாத சூழ்நிலை உள்ளது.
கடந்த சீசனில் 3 ஆட்டங்களில் ஓவர்கள் வீச மும்பை அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டிருந்தது. இதனால் இந்த விவகாரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாது.
இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹர்திக் பாண்டியா கூறும்போது, “சூர்யகுமார் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். மும்பை அணியில் நான் இல்லையென்றால் கேப்டன் பதவிக்கு அவர்தான் சிறந்த தேர்வு” என்றார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரை 4-1 என வென்றிருந்தது. ஆனால் இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ் 38 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் 4 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது. 10 தோல்விகளை எதிர்கொண்ட அந்த அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்துடன் தொடரை நிறைவு செய்திருந்தது. ஆனால் இம்முறை அந்த அணி வலுவாக களமிறங்குகிறது.