பாகிஸ்தான் வாரியத்துக்கு ரூ.738 கோடி நஷ்டம் | rupees 738 crore loss for pakistan cricket board hosting icc champions trophy
புதுடெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 மைதானங்களின் சீரமைப்பு பணிக்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ.504 கோடியை செலவிட்டிருந்தது. இது ஏற்கெனவே மதிப்பிட்ட தொகையைவிட 50 சதவீதம் அதிகரித்திருந்தது.
தொடர்ந்து போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்கான என ஒட்டுமொத்தமாக ரூ.868 கோடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலீடு செய்திருந்தது. ஆனால் இதுவரை பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்றதற்கு கட்டணமாக ரூ.52 கோடி மட்டுமே திரும்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டிக்கெட் விற்பனை, ஸ்பான்சர்கள் வாயிலாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரூ.738 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியத்தை 90 சதவீதம் குறைத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மேலும் தங்குமிடம், பயணக்கட்டணம் ஆகியவற்றில் கெடுபிடிகளை காட்டி வருகிறது. முன்னர் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்ட வீரர்கள் தற்போது சாதாரண வசதி கொண்ட ஓட்டல்களில் தங்கியுள்ளனர்.