ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத ஷர்துல் லக்னோ அணியில் இடம்பெறுகிறாரா? | shardul thakur to play for lucknow supergiants in ipl
கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவுக்கு ஆடிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் இந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், ஏலத்தில் அதிர்ச்சிகரமாக எந்த அணியுமே ஷர்துல் தாக்குரை ஏலம் எடுக்கவில்லை. இப்போது அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐபிஎல் சீசன் ஷர்துலுக்கு மிக மோசமான சீசனானது. 9 போட்டிகளில் வெறும் 5 விக்கெட்டுகளையும், வெறும் 21 ரன்களை மட்டுமே ஷர்துல் எடுத்தார். இதனையடுத்து இவரை சிஎஸ்கே கழற்றி விட்டது. பிறகுதான் இருமுறை ஏலத்தில் விற்கப்படாமல் முடிந்தார். ஆனால், உள்நாட்டுக் கிரிக்கெட்டில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் 9 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஷர்துல். ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பைக்காக 9 போட்டிகளில் 35 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் 2 வீரர்களின் உடல் தகுதி பிரச்சினையில் இருப்பதால் அந்த இடத்திற்கு ஷர்துல் தாக்குரை கொண்டு வருவது பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என லக்னோ நிர்வாகத்தினால் பார்க்கப்படுகிறது. அதிவேக பவுலர் மயங்க் யாதவ், இடது கை வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரின் உடல்தகுதி இன்னும் தேசிய கிரிக்கெட் அகாடமியினால் அங்கீகரிக்கப்படவில்லை. மேலும், மிட்செல் மார்ஷ் 2025 சீசனில் தான் பந்து வீசப்போவதில்லை என்று முடிவெடுத்து விட்டார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 24-ம் தேதி லக்னோ தன் முதல் போட்டியில் விளையாடுகிறது. ஷர்துல் தாக்குர் இதுவரை ஐபிஎல் போட்டித் தொடரில் 95 போட்டிகளில் 307 ரன்களையும் 92 இன்னிங்ஸ்களில் 94 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் , லக்னோ அணியின் வலைப்பயிற்சியில் அவர் விளையாடியது அந்த அணிக்கு இந்த சீசனில் ஆடுவார் என்ற ஊகங்களை வலுவாக்கியுள்ளது.