தோனி 8-வது டவுன்; ரச்சின் ரவீந்திரா ஆடுவாரா? – சிஎஸ்கே லெவன் என்ன? | dhoni to bat 8th down in batting order for csk rachin ravindra playing eleven
மார்ச் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் ரைவல்ரிகளாக உருவாக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இதற்கான சிஎஸ்கே லெவனில் விஜய் சங்கர், அஸ்வின் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் மேலும் நூர் அகமது, கலீல் அகமது ஆகியோரும் அறிமுகமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து 2-வது சீசனாக கேப்டன் பதவியை அலங்கரிக்கிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஓப்பனிங்கில் ருதுராஜும் டெவன் கான்வேயும் இறங்குகிறார்கள். 2024 சீசனை டெவன் கான்வே காயம் காரணமாகத் துறந்தார்.
இப்போது ரச்சின் ரவீந்திராவா, டெவன் கான்வேயா என்ற கேள்வியில் சிஎஸ்கே அணி அனுபவத்தின் பக்கம் சாய்ந்து டெவன் கான்வேயை தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது மூன்றாம் நிலையில் தொடர்ந்து 2 சீசன்களாக மோசமாக இருந்து வரும் ராகுல் திரிபாதிக்குப் பதில் ரச்சின் ரவீந்திர இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பேட்டிங்கில் 4-ம் நிலைக்கு விஜய் சங்கர் மற்றும் தீபக் ஹூடா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் யார் உள்ளே வருவார்கள் என்பது தெரியவில்லை, பொதுவாக சிஎஸ்கே அணி வெளி வீரர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் அணி என்பதால் தீபக் ஹூடா இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் என்பதால் தோனிக்கு ஆல்ரவுண்டர்களையே அதிகம் பிடிக்கும் என்பதால் விஜய் சங்கரைத் தேர்வு செய்யும் வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது.
அடுத்த நிலையில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த ஷிவம் துபே வருவார், இவர் இந்த சீசனில் வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இவரது தன்னம்பிக்கை லெவல் அதிகமாக இருப்பதால் இவரைக் கட்டுப்படுத்த எதிரணியினர் தனியாக உத்திகளை வகுத்தாக வேண்டியுள்ளது.
சாம் கரண் 3 சீசன்கள் பஞ்சாப் கிங்ஸுக்கு ஆடிய பிறகு இப்போது சிஎஸ்கேவுக்காக ஆடவிருக்கிறார். இவரும் ரவீந்திர ஜடேஜாவும் பினிஷிங் ரோலைப் பூர்த்தி செய்வார்கள், ஆனாலும் சாம் கரண் அனைத்துப் போட்டிகளிலும் ஆட வாய்ப்பில்லை.
அடுத்து தோனி. இப்போதெல்லாம் அவர் 2 ஓவர் பிளேயர் ஆகிவிட்டார். இவருக்கு நிரூபிப்பதற்கு ஒன்றுமில்லை. அணியின் உத்தியில் இவருடைய பங்கேற்பு பெரிய பலம். ஆகவே ஒரு ஆடும் பயிற்சியாளராகவே தோனி இருப்பார். விக்கெட் கீப்பிங்கில் இவருக்கு அடுத்த இடத்தில் டெவன் கான்வேதான் இருக்கிறார். அஸ்வின் மீண்டும் சொந்த மண்ணில் ஆடுவார். இவரும் கேப்டன்சி மெட்டீரியல் என்பதால் சிஎஸ்கே இந்த முறை ஆட்கொள்ளப்பட வேண்டிய ஒரு சக்தியாக உள்ளது.
சிஎஸ்கே உத்தேச லெவன்: ருதுராஜ், கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, சாம் கரண், ஜடேஜா, தோனி, அஸ்வின், நூர் அகமது, மதீஷா பதிரணா, கலீல் அகமது (இம்பாக்ட் சப்).