EBM News Tamil
Leading News Portal in Tamil

பாகிஸ்தானை சுருட்டி வீசியது நியூஸி. | new zealand beats pakistan in first t20i cricket match


கிறைஸ்ட்சர்ச்: பாகிஸ்தான் – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக குஷ்தில் ஷா 32, கேப்டன் சல்மான் ஆகா 18, ஜகன்தத் கான் 17 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கை ரன்னை தொடவில்லை. தொடக்க வீரர்களான முகமமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் ஆகியோர் முதல் 8 பந்துகளுக்குள்ளே ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினர். தொடர்ந்து இர்பான் கான் 1, ஷதப் கான் 3 ரன்களில் நடைய கட்ட 4.4 ஓவர்களில் 11 ரன்களுக்கு 4 விக்கெட்களை தாரை வார்த்த பாகிஸ்தான் அணியால் அதன் பின்னர் மீள முடியாமல் போனது.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி 4, கைல் ஜேமிசன் 3, இஷ் சோதி 2 விக்கெட்களை வீழ்த்தினர். எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரனக்ள் எடுத்து வெற்றி பெற்றது. டிம் ஷெய்பர்ட் 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

ஃபின் ஆலன் 29, டிம் ராபின்சன் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 18-ம் தேதி டூனிடின் நகரில் நடைபெறுகிறது.