டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமனம் @ IPL 2025 | axar patel to lead delhi capitals as captain in ipl 2025 season
புதுடெல்லி: ஐபிஎல் 18-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதை அந்த அணி நிர்வாகம் இன்று (மார்ச் 14) அறிவித்துள்ளது.
கடந்த 2019 முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அக்சர் படேல் விளையாடி வருகிறார். இந்த சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடந்தது. இருப்பினும் அவரை விடுவிக்காமல் ரூ.16.50 கோடிக்கு டெல்லி அணி தக்கவைத்தது. கேப்டன்சியில் அவருக்கு பெரிய அளவில் அனுபவம் இல்லை. உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் குஜராத் அணியை 23 போட்டிகளில் வழிநடத்தி உள்ளார்.
கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஒரு போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழி நடத்தி இருந்தார். அண்மையில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆல்ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை அக்சர் வெளிப்படுத்தி இருந்தார்.
“டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஆனதை எண்ணி பெருமை கொள்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக நான் வளர்ந்துள்ளேன். மேலும், அணியை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என நம்புகிறேன். அதற்கு நான் தயாராக உள்ளேன்” என அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனை ஆறாவது இடத்தில் டெல்லி அணி நிறைவு செய்தது. கேப்டன், பயிற்சியாளர் என நிறைய மாற்றங்களுடன் அந்த அணி இந்த முறை களம் காண்கிறது. வரும் 24-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை டெல்லி எதிர்கொள்கிறது.
அக்சர் @ ஐபிஎல்: 31 வயதான அக்சர் படேல், 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். 1653 ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பஞ்சாப் கிங்ஸ் (68 போட்டிகள்) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (82 போட்டிகள்) அணிகளுக்காக அவர் ஐபிஎல் விளையாடி உள்ளார்.