இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் அபிட் அலி மறைவு – அறிமுக டெஸ்ட்டில் 6 விக்கெட் வீழ்த்தியவர்! | Former Indian all-rounder Abid Ali passes away – took 6 wickets in his debut test
1967 முதல் 1974-ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடிய சையத் அபிட் அலி காலமானார். அவருக்கு வயது 83. இவர் கலிபோர்னியாவில் இயற்கை எய்தினார். மித வேகப்பந்து வீச்சாளர் என்றாலும் பீல்டிங்கில் உயர் தரநிலையையும் உடல் தகுதியில் உச்சபட்ச தரநிலையையும் அப்போதே பரமரித்தவர் அபிட் அலி. ரன்களை ஓடி எடுப்பதில் லைட்னிங் ஸ்பீட் என்பார்களே அந்த வகையில் அந்தக் கால ஜாண்ட்டி ரோட்ஸ் என்றே இவரை வர்ணிக்கலாம்.
அபிட் அலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய தருணம் 1971-ல் அஜித் வடேகர் தலைமை இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற போது நிகழ்ந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 355 ரன்களை எடுக்க இந்திய அணி 284 ரன்களையே எடுக்க முடிந்தது. அதில் அபிட் அலி 8-ம் நிலையில் இறங்கி 26 ரன்களை அடித்து பங்களிப்புச் செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சந்திரசேகரின் மாய சுழலுக்குள் சிக்கி 101 ரன்களுக்குச் சுருள இந்திய வெற்றிக்குத் தேவை 173 ரன்கள் அப்போது 8-ம் நிலையில் இறங்கிய அபிட் அலி ஸ்கொயர் கட் செய்து வெற்றி ரன்களை எடுத்தார்.
1974-75 இடையே 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் ஆடினார் சையத் அபிட் அலி. இது இந்திய அணியின் முதல் 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாகவும் அமைந்தது கூடுதல் சிறப்பு. மொத்தம் 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அபிட் அலி 47 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை 55 ரன்களுக்கு தன் அறிமுக இன்னிங்ஸிலேயே கைப்பற்றியது அவரது ஆகச்சிறந்த ஸ்பெல் ஆகும்.
இவர் மித வேகப்பந்து வீச்சாளர் என்றாலும் புதிய பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வதிலும் கட்டர்களை வீசுவதிலும் வல்லவர். பேட்டிங்கில் 6 டெஸ்ட் அரைசதங்களை எடுத்துள்ளார். மேற்சொன்ன அதே அறிமுக ஆஸ்திரேலிய தொடரில் இந்த 6 அரைசதங்களில் சிட்னியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கண்டதும் அடங்கும். முதல் இன்னிங்சில் 123 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து கிளீசன் பந்தில் ஹிட் விக்கெட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் 83 ரன்களை விளாசினார். இந்தியா தோற்றபோதும், சையத் அபிட் அலி தொடக்க வீரராக பரூக் இஞ்ஜினியருடன் இறங்கி ஆடிய இந்த 2 அரைசதங்கள் இப்போதைய கோலிகள், ரோஹித் சர்மாக்கள் எடுக்கும் சீரற்ற சதங்களைக் காட்டிலும் விலை மதிப்புள்ளது.
53 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 21 முறை டாப் ஆர்டரில் இறங்கியுள்ளார். 1018 ரன்களை எடுத்துள்ளார். சிட்னியில் நாம் மேற்சொன்ன இரண்டு அரைசதங்களும் ஓப்பனிங்கில் இறங்கி, அப்போதைய வர்ணனையின் படி ‘ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை துணிகரமாக எதிர்கொண்டு அடித்து நொறுக்கிய’ ஆட்டமாகும். ஓப்பனிங், 4ஆம் நிலை, 8ம் நிலை, 10, 11 நிலைகள் என்று எந்த டவுனிலும் இறங்கி ஆடக்கூடியவர் அபிட் அலி.
ஒருமுறை சர்ச்சைக்குரிய நியூஸிலாந்து அம்பயரிங்கில் இவர் தனது எதிர்ப்பை மே.இ.தீவுகள் பவுலர் கொலின் கிராப்ட் காட்டியதற்கு இணையாகக் காட்டினார். அதாவது இவர் ஒரு பந்தை ஓடி வந்து வேண்டுமென்றே பவுலிங்கிற்கு பதிலாக த்ரோ செய்தார். நோ-பால் என்றனர் நடுவர், ஆனால் இவர் ஏன் அப்படிச் செய்தார் என்றால் நியூஸிலாந்து பவுலர் கேரி பார்லெட் என்பவர் அதே போன்ற ஒரு த்ரோ பந்துவீச்சில்தான் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அபிட் அலி வேண்டுமென்றே த்ரோ செய்தார்.
ஹைதராபாத் அணிக்காக ஆடினார், இந்திய ஸ்பின் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில் குறைந்த ஓவர்களே வீசக்கிடைத்த வாய்ப்பில் தன் திறமையி நிரூபித்த ஒரு அருமையான ஆல்ரவுண்டர் அபிட் அலி. ஹைதராபாத்திற்காக முதல் தர கிரிக்கெட்டில் 212 போட்டிகளில் 397 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 8732 முதல் தர ரன்களை 13 சதங்கள் 41 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். மரணமடையும் போது கலிபோர்னியாவின் டிரேசியில் தன் குடும்பத்தினருடன்தான் இருந்தார் அபிட் அலி.