வங்கதேசத்துடன் இன்று மோதல்: ஆறுதல் வெற்றியை பெறுமா பாகிஸ்தான்? | does Pakistan cricket team get a win in Clash with Bangladesh today
ராவல்பிண்டி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ராவல்பிண்டியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன. வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடமும், 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்திடமும் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்றிருந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்திருந்தது.
பாகிஸ்தான் அணி ஐசிசி தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேறுவது தொடர்ச்சியாக இது 3-வது முறையாக நிகழ்ந்துள்ளது. அந்த அணி 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையிலும் லீக் சுற்றுடன் நடையை கட்டியிருந்தது.
29 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் ஐசிசி தொடர் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் செயல் திறன் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் வீரர்கள், அணி கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த தொடரில் இரு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். இதனால் சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் பாகிஸ்தான் அணி ஆர்வம் காட்டக்கூடம். இருப்பினும் அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியப்படும். பேட்டிங்கில் டாப் ஆர்டரில் எந்தவித ஆக்ரோஷமும் வெளிப்படாமல் உள்ளது. 35 ஓவர்களுக்கு பிறகே தாக்குதல் ஆட்டம் மேற்கொள்வதற்கு முயற்சி செய்வது அணியின் ஸ்திரத்தன்மையை வெகுவாக பாதித்துள்ளது.
நடப்பு தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 161 பந்துகளிலும், இந்தியாவுக்கு எதிராக 147 பந்துகளிலும் ரன்கள் சேர்க்காமல் (டாட் பால்) விட்டது பாகிஸ்தான் அணி. மோசமான ஷாட் தேர்வுகள், தரம் குறைந்த பீல்டிங், பார்மில் இருந்த வீரர்கள் காயத்தால் விலகியது ஆகியவை அணியின் செயல் திறனை முடக்கி உள்ளது. பாபர் அஸம், முகமது ரிஸ்வான் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.
இது ஒருபுறம் இருக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஷாகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப் ஆகியோர் தங்களது பந்துவீச்சால் எந்த ஒரு கட்டத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றத் தவறிவிட்டனர். சுழற்பந்து வீச்சாளர் தேர்விலும் தடுமாற்றம் நிலவுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக களத்தில் எந்தவித போராட்ட குணமும் வெளிப்படாதது அணியின் ஒட்டுமொத்த திறமை குறித்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இவற்றுக்கு இன்றைய ஆட்டத்தில் விடைதேட பாகிஸ்தான் அணி முயற்சிக்கக்கூடும்.