EBM News Tamil
Leading News Portal in Tamil

ஒருநாள் போட்டி தரவரிசை: ஷுப்மன் கில் முதலிடத்தில் நீடிப்பு | ODI rankings Shubman Gill retains top spot


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில், வங்கதேச அணிக்கு எதிராக 101 ரன்களையும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 46 ரன்களையும் சேர்த்திருந்தார். இதன் மூலம் அவர், 21 ரேட்டிங் புள்ளிகளை பெற்று மொத்தம் 817 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தானின் பாபர் அஸமுக்கும், ஷுப்மன் கில்லுக்குமான இடைவெளி 23 புள்ளியில் இருநது 47 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் 2 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை அடைந்துள்ளார். நியூஸிலாந்து அணியின் வில் யங் 8 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தையும், டாம் லேதம் 11 இடங்கள் முன்னேறி 30-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ரச்சின் ரவீந்திரா 18 இடங்கள் முன்னேற்றம் கண்டு 18-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி 4 இடங்கள் முன்னேறி 50-வது இடத்தையும், ஜோஷ் இங்லிஷ் 18 இடங்கள் முன்னேறி 81-வது இடத்தையும், வங்கதேசத்தின் தவூஹித் ஹிர்டோய் 18 இடங்கள் முன்னேறி 64-வது இடத்தையும், ஜாகர் அலி 64 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தையும் அடைந்துள்ளனர்.