ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. லாகூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. தனது 6-வது சதத்தை விளாசிய இப்ராகிம் ஸத்ரன் 146 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 177 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை இப்ராகிம் ஸத்ரன் படைத்தார். இதற்கு முன்னர் நடப்பு தொடரில் இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் 165 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் இப்ராகிம் ஸத்ரன்.