ஆப்கன் 8 ரன்களில் வெற்றி: இங்கிலாந்து வெளியேற்றம் | சாம்பியன்ஸ் டிராபி | afghanistan knocks out england from icc champions trophy 2025
லாகூர்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை 8 ரன்களில் வென்றுள்ளது ஆப்கானிஸ்தான். இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது.
ஆப்கன் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான், 146 பந்துகளில் 177 ரன்கள் எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். கேப்டன் ஹஷ்மதுல்லா 40, அஸ்மதுல்லா 41, நபி 40 ரன்கள் எடுத்தனர்.
326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டியது. சால்ட் 12, ஜேமி ஸ்மித் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். ரூட் உடன் பென் டக்கெட் இணைந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். டக்கெட் 38 ரன்களில் ரஷித் கான் சூழலில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார்.
புரூக் 25, கேப்டன் பட்லர் 38, லிவிங்ஸ்டன் 10 ரன்கள் எடுத்தனர். 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து சதம் எடுத்திருந்தார் ஜோ ரூட். ஓவர்டன் 32, ஆர்ச்சர் 14 மற்றும் ரஷீத் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ஆப்கன் பவுலர் அஸ்மத்துல்லாஹ் உமர்சாய் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளை அடுத்து தொடர்ந்து இருந்து இங்கிலாந்து வெளியேறி உள்ளது. 8 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருதை இப்ராஹிம் சத்ரான் வென்றார்.
குரூப் – ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. குரூப் – பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவையாக உள்ளது.