EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்திய அணிக்கு ‘துபாய் சாதகம்’ கூற்றை வழிமொழியும் நாசர் ஹுசைன், ஆத்தர்டன்! | Nasser Hussain Atherton endorse team india Dubai advantage in champions trophy


2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்குள் இந்திய அணி நுழைந்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி துபாயில் மட்டும் ஒரே மைதானத்தில் ஆடுவது ‘ஒரு நியாயமற்ற சாதக பலன்’ இருக்கிறது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் நாசர் ஹுசைன், மைக் ஆத்தர்டன் கூறியுள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்கள் கருதி இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட முடியாது என்று சொல்லி ‘நடுநிலை’ மைதானங்களில் ஆடுவது மிகச் சரியான முடிவுதான். ஆனால், துபாயில் மட்டுமே ஆடுவது என்பது ஒரு சமச்சீரற்ற சாதகப் பலன்களை இந்திய அணிக்கு வழங்குகிறது என்ற விமர்சனங்களையும் மறுப்பதற்கில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்களில் நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே தொடரை நடத்தும் ஓர் அணி இத்தனை விரைவு கதியில் தொடரை விட்டு வீட்டுக்குப் போனதில்லை. மற்ற 7 நாடுகளும் பாகிஸ்தானில் ராவல்பிண்டி, கராச்சி, லாகூர் என்று 3 வித்தியாசமான மைதானங்களில் தங்கள் போட்டிகளை ஆடும்போது, இந்திய அணி மட்டும் துபாயில் மட்டுமே ஆடுவது, பிட்ச் உள்ளிட்ட கண்டிஷன்கள் மீதான சாதகப் பலன்களை இந்திய அணிக்குக் கூடுதலாகவே வழங்குகின்றது.

இந்நிலையில், இதுவரை பாகிஸ்தானில் ஆடிவிட்டு வரும் அணிகள் துபாய் பிட்சில் வந்து அரையிறுதியில் ஆட வேண்டும், அரையிறுதியில் இந்திய அணி வென்றால் இறுதிப் போட்டியும் துபாயில்தான் நடைபெறும், இது முழுக்க முழுக்க ஒரு தலைபட்சமான சாதக அம்சம் என்று அயல்நாட்டு ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் கருதுவதை முற்றிலும் தவறு என்று கூறி விட முடியாது.

பாட் கம்மின்ஸ் முதலில் இந்திய அணி வலுவான அணி அதுவும் ஒரே மைதானத்தில் ஆடுவது கூடுதல் சாதகமே என்று கூறியிருந்தார். இதனை இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் நாசர் ஹுசைனும், மைக் ஆத்தர்டனும் வழிமொழிந்தனர்.

நாசர் ஹுசைன், மைக் ஆத்தர்டன் ஸ்கை ஸ்போர்ட்ஸுக்காக உரையாடும்போது, “துபாயில் மட்டுமே இந்திய அணி எல்லா போட்டிகளையும் ஆடுவதால் சாதகத்தின் பலனை அளவிட முடியாது என்றாலும் இந்திய அணிக்கு இது நிச்சயம் சாதகமே. மற்ற அணிகள் மைதானத்திற்கு மைதானம் பயணிக்க வேண்டியுள்ளது, ஊர் விட்டு ஊர் பயணிக்க வேண்டியுள்ளது, இந்தக் கடினப்பாடு இந்திய அணிக்கு இல்லை.

எனவே, இந்திய அணி தங்கள் அணித்தேர்வை துபாயில் உள்ள பிட்சின் அடிப்படையில் மிகத் துல்லியமாகச் செய்து கொள்ள முடிகிறது. தொடருக்கு வரும் முன்பே அரையிறுதியை எங்கு ஆடப்போகிறோம், என்ன பிட்ச் என்பதெல்லாம் இந்திய அணிக்கு தெரிந்து விடுகிறது. இது மறுக்க முடியாத சாதகப் பலனே. ஆனால் எவ்வளவு சாதகம் என்பதை அளவிடுவது கடினம். ஆனால் நிச்சயம் சாதகமே. ஏனெனில், துபாயை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டால் போதுமானதாக இருக்கிறது.

ஹுசைன் தான் பார்த்த ஒரு ட்வீட்டை மேற்கோள் காட்டும் போது, “தொடரை நடத்தும் நாடு பாகிஸ்தான், ஆனால் இந்தியாவுக்கு உள்நாட்டில் ஆடும் சாதகப்பலன்” என்ற கூற்றை “நிலைமைகளை இந்தக் கூற்று தொகுத்துக் கூறிவிடுகிறது” என்றார்.

மேலும் அந்த உரையாடலில், ‘கண்டிஷன் என்னவென்பது தெரிகிறது, எனவே அதற்குத் தக்காற்போல் ஸ்பின்னர்களை அணியில் எடுக்கின்றனர். தேர்வில் ஸ்மார்ட்னஸ் கிடைக்கிறது. இந்திய ஊடகங்கள் கேட்கின்றன ‘ஏன் இத்தனை ஸ்பின்னர்கள்? ஏன் ஒரு வேகப்பந்து வீச்சாளரைக் கூடுதலாகத் தேர்வு செய்வதில்லை’ என்று இந்திய ஊடகங்களில் விவாதம் நடந்து வருகிறது. அதற்கு அவசியமே இல்லை என்கிறது இந்திய அணி நிர்வாகம். நமக்கு இதன் விடை கிடைத்து விடுகிறது.

உதாரணமாக இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறினால் ஒரேயொரு ஸ்பின்னரைத்தான் கொண்டுள்ளது. அவருக்கும் காயம் ஏற்பட்டால் அவ்வளவுதான். இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து ஆட முடியாது, ஆனால் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இல்லாமல் இத்தகைய தொடரை நடத்தவும் முடியாது, ஆகவே வேறு வழியில்லை.

ஆகவே துபாய், அவர்கள் மகிழ்ச்சியுடனும் வசதியுடனும் அங்கு இருந்து ஆடுகிறார்கள். 6 போட்டிகள் ஒரே இடத்தில் என்பது அவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்து விடுகிறது, அனைத்துப் போட்டிகளிலும் வென்று விட்டால், இன்னொரு ஐசிசி தொடரை அவர்கள் வென்று விடுகிறார்கள், அவ்வளவே” இவ்வாறு ஹுசைன் அந்த உரையாடலில் புலம்பியுள்ளார்.