நாக்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா – கேரளா அணிகள் இன்று மோதுகின்றன.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 90-வது சீசன் இறுதிப் போட்டி நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியனான விதர்பா, கேரளா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கேரளா அணி முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. விதர்பார் அணி கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
அக்சய் வத்கர் தலைமையிலான விதர்பா அணி இந்த சீசனில் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி கண்டிருந்தது. லீக் சுற்றில் 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றியை வசப்படுத்தியிருந்தது. கால் இறுதி சுற்றில் 198 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியையும், அரை இறுதி சுற்றில் 80 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியையும் வீழ்த்தியிருந்தது.
2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த விதர்பா அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் விதர்பா அணி, மும்பையிடம் வீழ்ந்திருந்தது. அந்த அணியின் பேட்டிங்கில் யாஷ் ரத்தோடு 9 ஆட்டங்களில் 58.13 சராசரியுடன் 933 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள், 3 அரை சதங்கள் அடங்கும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேப்டன் அக்சய் வத்கர் 48.14 சராசரியுடன் 674 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதம், 2 அரை சதம் அடங்கும்.
இவர்களுடன் கருண் நாயர் (642), டேனிஷ் மலேவர் (557), துருவ் ஷோரே (446) ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
பந்துவீச்சில் 22 வயதான ஹர்ஷ் துபே வலுவானவராக திகழ்கிறார். அவர், 9 ஆட்டங்களில் 66 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். 7 முறை 5 விக்கெட்களை சாய்த்துள்ளார். ரஞ்சி கோப்பையின் ஓர் சீசனில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஹர்ஷ் துபே நிகழ்த்துவதற்கு மேற்கொண்டு 3 விக்கெட்கள் மட்டுமே தேவை. இந்த வகை சாதனையில் பிஹாரை சேர்ந்த அஷுதோஷ் அமான் 2018-19-ம் ஆண்டு சீசனில் 68 விக்கெட்கள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
சச்சின் பேபி தலைமையிலான கேரளா அணி முதன்முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணி கால் இறுதிப் போட்டியில் ஜம்மு & காஷ்மீர் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் ஒரு ரன் முன்னிலையும், அரை இறுதியில் குஜராத் அணிக்கு எதிராக 2 ரன்கள் முன்னிலையும் பெற்று இறுதிப் போட்டியில் கால்பதித்திருந்தது.
அதிர்ஷ்டத்தால் கேரளா அணி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது என ஒருதரப்பினர் கூறினாலும் அதில் அந்த அணியின் கடின உழைப்பும் உள்ளது. முக்கியமாக கால் இறுதி சுற்றின் 2-வது இன்னிங்ஸில் வலுவான தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி ஆட்டத்தை தன் வசப்படுத்தியது. பேட்டிங்கில் சல்மான் நிஷார் 2 சதம், 3 அரை சதங்களுடன் 607 ரன்களும், முகமது அசாருதீன் ஒரு சதம், 4 அரை சதங்களுடன் 601 ரன்களும் விளாசி உள்ளனர்.
இதில் முகமது அசாருதீன், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 341 பந்துகளை சந்தித்து 177 ரன்கள் எடுத்து முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். பந்துவீச்சை பொறுத்தவரையில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜலஜ் சக்சேனா 38 விக்கெட்களை வீழ்த்தி பலம் சேர்க்கக்கூடியவராக உள்ளார். அவருக்கு உறுதுணையாக ஆதித்யா சர்வதே உள்ளார். சுழற்பந்து வீச்சாளரான அவர், இந்த சீசனில் 30 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.