“சாம்பியன்ஸ் டிராபியில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம்” – பாட் கம்மின்ஸ் | Pat Cummins about team india Playing same ground in Champions Trophy
சென்னை: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் ஒரே மைதானத்தில் நடைபெறுவது அந்த அணிக்கு சாதகம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 19-ம் தேதி மினி உலகக் கோப்பை என சொல்லப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் தொடங்கியது. இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் அந்த ஆட்டமும் துபாயில் தான் நடைபெறும். இந்திய அணி தற்போது அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காயம் காரணமாக இந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு உலகக் கோப்பை – 2023 மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்று கொடுத்த கேப்டனான பாட் கம்மின்ஸ் விளையாடவில்லை. இந்நிலையில், இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்து அவர் தெரிவித்தது.
“இந்த தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் ஒரே மைதானத்தில் நடைபெறுகிறது. நிச்சயம் அது அவர்களுக்கு சாதகமானது. அவர்கள் இந்த தொடரில் வலுவான அணியாக உள்ளனர். அதோடு அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் நடைபெறும் பலம் சேர்க்கிறது” என கம்மின்ஸ் கூறியுள்ளார்.
இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. மழை காரணமாக முதல் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் ரத்தானது. அதனால் தலா ஒரு புள்ளிகள் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் தோல்வியை தழுவும் அணி தொடரில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகி உள்ளது.