EBM News Tamil
Leading News Portal in Tamil

‘இந்த இந்திய அணியிடம் பயம் என்பதே இல்லை!’ – ஆஸி.க்கு இயன் சாப்பல் எச்சரிக்கை | Australia need a better mental approach to their batting says Ian Chappell


நியூஸிலாந்திடம் சொந்த மண்ணில் 3-0 என்று வரலாறு காணாத ஒயிட்வாஷ் கண்ட இந்திய அணி சற்றும் எதிர்பாராத விதமாக பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை, உறுதி அனைத்தையும் குலைக்கும் விதமான வெற்றியைப் பெற்று முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியைப் பார்த்து ஓர் அச்சம் ஏற்படச் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்தில் எழுதிய பத்தியில், “ஆஸ்திரேலியாவின் பெரிய பெயர்களைக் கண்டு அதிகமாக அச்சப்படும் இந்திய அணி அல்ல இது. மிகவும் ஆக்ரோஷமான இந்திய அணி” என்று அடிலெய்ட் டெஸ்ட் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவை இயன் சாப்பல் எச்சரித்துள்ளார்.

அவர் அந்தப் பத்தியில் கூறியிருப்பதாவது: “பெர்த்தில் எளிதான வெற்றி அதனையடுத்து அடிலெய்ட் பிங்க் பந்து டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று 2-0 என்று முன்னிலை வகிக்கலாம் என்று ஆஸ்திரேலியா நினைத்தது. ஆனால் பெர்த்தில் நடந்ததென்னவோ பேரழிவுத் தோல்வி. இப்போது அடிலெய்டிலும் தோற்று 0-2 என்று பின்னடைவு காணும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி நடந்தால் ஆஸ்திரேலிய அணி மிக மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும். அசாதாரணமான, கடினமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஆஸ்திரேலியாவுக்கு இந்த நெருக்கடியை அளித்தது பும்ராவின் மாஸ்டர் கிளாஸ் பவுலிங். தவிரவும் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது கேலிக்குரிய விதத்தில் குழப்பமாக சிந்தித்ததே. பும்ரா மிகச்சிறப்பாக வீசினார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவருக்கு உறுதுணையாக மிக நல்ல ஆதரவு அளித்தார் சிராஜ். இந்திய வேகப்பந்து வீச்சு வலுவாக உள்ளது. திறமை மிகுந்த ஆகாஷ் தீப் இன்னமும் அணிக்குள் அழைக்கப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்வது நலம்.

ஆஸ்திரேலியாவின் முட்டாள்தனமான பேட்டிங் மார்னஸ் லபுஷேன் என்னும் நம்பர் 3 பேட்டர் மூலம் விளைந்ததே. லபுஷேன் முதலில் பேட்டில் ஆடக் கற்றுக் கொள்ள வேண்டும். நிறைய பந்துகளை அவர் விட்டு விட வேண்டும் என்று எந்த கம்ப்யூட்டர் சொன்னாலும் அவர் தன் பேட்டை நம்ப வேண்டும். அடிலெய்டுக்கு முன்னரே அவர் இந்த முடிவுக்கு வருதல் நலம்.

வலுவான 3ம் நிலை வீரர் என்னும் பாரம்பரியத்தைக் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் ஒரு நம்பர் 3 வீரர் பந்துகளை சாப்பிட்டு விட்டு 52 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுப்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது. லபுஷேனின் குழப்பமான சிந்தனை இந்திய பவுலர்களுக்கு தீனி போட்டது. மேலும் இவர் இப்படி பேட் செய்ததால் மற்ற பேட்டர்கள் இந்திய பவுலர்கள் ஏதோ கையெறி குண்டு வீசி தாக்குவது போல் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

இப்போதைய தலைமுறையை முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடுவது அபாயகரமானது என்றாலும், 3ம் நிலையில் ரிக்கி பாண்டிங்கின் எதிர்த்தாக்குதல் பேட்டிங் முறையைப் பரிசீலிப்பது நல்லது. நியூஸிலாந்துக்கு எதிராக தங்கள் நாட்டில் பெரிய பின்னடைவைச் சந்தித்தது இந்திய அணி. ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவுக்குத் தெரியும், தாங்கள் எதிர்கொள்ளும் இந்திய அணி திறமை மிக்கது ஆக்ரோஷமானது என்று. ஆஸ்திரேலியாவின் பெரிய வீரர்களைக் கண்டு அதிகம் அச்சப்படுபவர்கள் அல்ல இந்த இந்திய அணியினர்” என்று எழுதியுள்ளார் இயன் சாப்பல்.