EBM News Tamil
Leading News Portal in Tamil

மோகன் பகானுடன் இன்று சென்னையின் எஃப்சி மோதல் | Chennaiyin FC clash with Mohun Bagan today


ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில உள்ள விவேகானந்தா யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் – சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன.

மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணி தனது கடைசி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை தோற்கடித்த நிலையில் சென்னையின் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது. 5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளிகளை குவித்து 2-வது இடத்தில் உள்ள மோகன் பகான் அணி, இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

மறுபுறம் சென்னையின் எஃப்சி அணி தனது கடைசி ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் களமிறங்குகிறது. 3 வெற்றி, 3 டிராக்களுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ள சென்னையின் எஃப்சி அணி புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணி ஐஎஸ்எல் தொடரில் தனது சொந்த மைதானத்தில் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் உள்ளது. மேலும் மோகன் பகான் அணி தனது சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய இரு ஆட்டங்களிலும் எதிரணியை கோல் அடிக்க விடாமல் (கிளீன் ஷீட்) வெற்றி கண்டிருந்தது.

அதேவேளையில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட அணி தனது சொந்த மண்ணில் சென்னையின் எஃப்சி அணிக்கு எதிராக ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. அந்த அணி சென்னையின் எஃப்சி அணியிடம் இரு முறை தோல்வி அடைந்துள்ளது. ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மோகன் பகான் 3 ஆட்டங்களிலும், சென்னையின் எஃப்சி 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.