“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்” – டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி! | Rafael Nadal speech at Davis Cup after retirement
மலகா: தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்த நிலையில் கலங்கிய கண்களுடன் நடால் விடைபெற்றார்.
இந்த டேவிஸ் கோப்பை தொடருடன் தான் ஓய்வு பெறுவதை கடந்த மாதமே நடால் அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கிய நடால், ஆரம்பத்தில் முன்னேறினாலும், முதல் செட்டில் 4-6 என்ற கணக்கிலும் இரண்டாவது செட்டில் 4-6 என்ற கணக்கிலும் தோல்வி அடைந்தார்.
இது இந்த போட்டியை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு சோகத்தை தந்தது. போட்டி தொடங்கியபோது ஆரவாரமாக இருந்த அரங்கம் இதன்பிறகு அமைதியானது. பிரியாவிடையின் போது பேசிய ரஃபேல் நடால், “நான் ஒரு மரபை விட்டுச் சென்றேன் என்ற மன அமைதியுடன் நான் வெளியேறுகிறேன். என்னைப் பொறுத்தவரை இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, எனக்கு மனதுக்கு நெருக்கமான ஒன்றாகும்.
எனக்கு கிடைத்த அன்பு என்பது, மைதானத்தில் நடந்தவற்றுக்காக மட்டும் என்பதாக இருந்தால், அது ஒரே மாதிரியாக இருந்திருக்காது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மக்களாகிய உங்கள் அனைவருக்கும் நன்றி. 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது, இதில் நல்ல ஆண்டுகளும் கெட்ட ஆண்டுகளும் இருந்தன. என்னால் உங்கள் அனைவருடனும் வாழ முடிந்தது. உலகம் முழுவதும், குறிப்பாக ஸ்பெயினில் இருந்து இத்தனை அன்பை பெற முடிந்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டக்காரனாக உணர்ந்தேன்.
பட்டங்கள், எண்ணிக்கைகள் இருந்தாலும், மல்லோர்காவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதான நினைவில் இருக்க விரும்புகிறேன். நான் தொழில்முறை டென்னிஸ் உலகத்தை விட்டு வெளியேறுகிறேன். இந்த பயணத்தில், வழியில் பல நல்ல நண்பர்களை சந்தித்தேன். இனி டென்னிஸ் விளையாட விரும்பவில்லை என்று என் உடல் என்னிடம் கூறியது. நான் அதை ஏற்க வேண்டும். நான் பாக்கியம் பெற்றவன். எனது பொழுதுபோக்குகளையே எனது தொழிலாக என்னால் மாற்ற முடிந்தது. நான் அதிர்ஷ்டசாலி” இவ்வாறு ரஃபேல் நடால் நெகிழ்ச்சியாக பேசினார்.
38 வயதாகும் ரஃபேல் நடால், இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 14 பட்டங்கள் பிரெஞ்சு ஓபன் தொடரில் வென்றதாகும். சுமார் 20+ ஆண்டு காலம் களிமண் களத்தில் தனது ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தியவர். கடைசியாக கடந்த 2022-ல் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றிருந்தார்.