இந்தியாவில் விளையாடும் மெஸ்ஸி: அர்ஜெண்டினா அணி அடுத்த ஆண்டு கேரளா வருகை! | Argentina team to visit Kerala next year Messi playing in India
திருவனந்தபுரம்: அடுத்த ஆண்டு அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறது என்றும், இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் பங்கேற்பார் என்றும் கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தப் போட்டியை மாநில அரசு பொறுப்பேற்று நடத்தும் என அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “உலகின் நம்பர் 1 கால்பந்தாட்ட அணியான அர்ஜெண்டினா, கேரளாவில் விளையாட உள்ளது. இதில் மெஸ்ஸியும் விளையாட உள்ளார். இந்த உயர்மட்ட கால்பந்து போட்டியை நடத்துவதற்கான அனைத்து நிதி உதவியையும் மாநில வர்த்தகர்கள் வழங்குவார்கள். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அர்ஜெண்டினா அணி நிர்வாகம் அறிவிக்கும்.
அடுத்த ஒன்றரை மாத காலத்தில் அர்ஜெண்டினா அணி நிர்வாக குழுவை சேர்ந்தவர்கள் கேரளா வர உள்ளனர். இது தொடர்பாக கேரள அரசும், அர்ஜெண்டினா அணி நிர்வாகமும் கூட்டு அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளோம். அர்ஜெண்டினா அணி கேரளா வருவதில் எந்த மாற்றமும் இருக்காது. போட்டியை நடத்தும் தேதியை அர்ஜெண்டினா கால்பந்தாட்ட கூட்டமைப்பு அறிவிக்கும்.
இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா உடன் விளையாடும் எதிரணி மற்றும் போட்டி நடைபெறும் மைதானம் குறித்த அறிவிப்பு முடிவு செய்யப்படும். 50,000 பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறும்” என அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டி கொச்சியில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜெண்டினா அணிக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். கேரள மாநில மக்கள் கால்பந்து விளையாட்டை அதிகம் நேசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.