EBM News Tamil
Leading News Portal in Tamil

சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய அணி பாக்., வந்தால் சிறப்பான வரவேற்பு: ரிஸ்வான் | India get warm welcome in Pakistan if come to play Champions Trophy Rizwan


ராவல்பிண்டி: அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று விளையாட இந்தியா தங்கள் நாட்டுக்கு வந்தால் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

“இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை நேசிக்கிறார்கள். மேலும், இந்திய அணி பாகிஸ்தான் நாட்டில் விளையாடுவதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தால் சிறப்பான, அன்பான வரவேற்பு கிடைக்கும்” என பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் புதிய கேப்டனான முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெற உள்ளது. 8 அணிகளும் இரு பிரிவுகளாக (தலா 4 அணிகள்) விளையாட உள்ளன. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.

கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது. அதன் பிறகு அங்கு சென்று விளையாடவில்லை. பாகிஸ்தான் அணி நேரடி தொடரில் விளையாட இந்தியாவுக்கு கடந்த 2012-ல் வந்திருந்தது. அதன் பின்னர் இரு அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு பாகிஸ்தான் வந்திருந்தது.

அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஹைபிரிட் மாடலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிக்கு முன்னேறினாலும் அந்தப் போட்டிகள் பாகிஸ்தானில் இல்லாமல் பொதுவான இடத்தில் நடைபெறும். இந்தியா விளையாடாத மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும். அதுவும் இல்லாமல் தொடரை முழுவதுமாக பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றினால் ஐக்கிய அரபு அமீரகம், தென் ஆப்பிரிக்கா அல்லது இலங்கையில் தொடர் நடைபெறும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.