EBM News Tamil
Leading News Portal in Tamil

பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் | No confidence motion against PT Usha


புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே ஐஓஏ கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறி செயல்படுகின்றனர் என்று பி.டி.உஷா குற்றம்சாட்டி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், ஐஓஏ தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுகிறார் என அவர் மீது உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் காரணமாக சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பி.டி.உஷா மறுத்துள்ளார்.

இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பி.டி.உஷாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ள சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் இத்தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.