வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி! | India defeats Bangladesh by seven wickets completes series sweep
கான்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்துள்ளது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் 2013 தொடங்கி இன்று வரை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனை படைத்துள்ளது இந்தியா.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களைச் சேர்த்தது. 2 மற்றும் 3 நாட்களில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. 4-வது நாள் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 233 ரன்களைச் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்டு வரலாற்று சாதனை படைத்து. இதன் மூலம் 285 ரன்களில் 9 விக்கெட் இழப்புக்கு இந்தி இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வங்கதேச அணியில் ஷத்மன் இஸ்லாம் மட்டும் நிலைத்து ஆடி 50 ரன்களை சேர்த்தார். அவருக்கு அடுத்தபடியாக முஸ்பிகுர் ரஹீம் 37 ரன்களை சேர்த்தார். இவர்களை தவிர்த்து மற்றவர்கள் சொற்ப ரன்களிலும், 2 பேர் டக்அவுட்டாகியும் தடுமாறிய நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 146 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆளுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆகாஷ் தீப் 1 விக்கெட் வீழ்த்தினார். 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய ரன்களை துரத்திய இந்திய அணியில் முதல் ஆளாக விக்கெட்டாகி 8 ரன்களில் வெளியேறினார் ரோகித் சர்மா. அடுத்து 6 ரன்களில் ஷுப்மன் கில் அவுட். யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து 51 ரன்களை சேர்த்து வெளியேறினார். 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி.17ஆவது ஓவரின் 2வது பந்தில் ரிஷப் பந்த் ஃபோர் அடித்து இலக்கை எட்டினார். விராட் கோலி 29 ரன்களிலும், ரிஷப் பந்த் 4 ரன்களிலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது.
இந்த தொடரின் சாதனைகள்: சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. 2013-2024 ஆண்டுகளில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனை படைத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியா 1994-2000 வரை 10 தொடர் வெற்றிகளை தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக குவித்தது. தற்போது இந்த சாதனையை இந்தியா முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100, 200, 250 ரன்களைச் சேர்த்த அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது.