EBM News Tamil
Leading News Portal in Tamil

2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்: இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை; பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டி | IND vs BAN second Test highlights


கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 52 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டி மழை காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டது. 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 3 விக்கெட்கள் இழப்புக்கு 107 ரன்கள் என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 74.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முஸ்பிகுர் ரஹிம் 11, லிட்டன் தாஸ் 13, ஷகிப் அல் ஹசன் 9, மெஹிதி ஹசன் 20, தைஜூல் இஸ்லாம் 5, ஹசன் மஹ்மூத் 1, காலித் அகமது ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தபோதிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 13-வது சதத்தை விளாசிய மொமினுல் ஹக் 194 பந்துகளில், ஒரு சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்களையும் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து விளையாடிய இந்திய அணி விரைவாக ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோஹித் சர்மா 11 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் விளாசிய நிலையில் மெஹிதி ஹசன் பந்தில் போல்டானார். தனது 6-வது அரை சதத்தை கடந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் மஹ்முத் பந்தில் போல்டானார். இவர்களைத் தொடர்ந்து ஷுப்மன் கில் (39), ரிஷப் பந்த் (9) ஆகியோர் ஷகிப் அல்ஹசன் பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்று ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, கே.எல்.ராகுல் ஜோடியும் ஆக்ரோஷமாக விளையாடியது.

விராட் கோலி 134.28 ஸ்டிரைக் ரேட்டில் 35 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் தாழ்வாக வந்த ஷகிப் அல்ஹசன் பந்தில் போல்டானார். தனது 15-வது அரை சதத்தை கடந்த கே.எல்.ராகுல் 43 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். இதையடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 8, அஸ்வின் 1, ஆகாஷ் தீப் 12 ரன்களில் நடையை கட்ட இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

வங்கதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது. ஜாகிர் ஹசன்10 ரன்களில் எல்பிடபிள்யூ முறையிலும், ஹசன் மஹ்முத் 4 ரன்களில் போல்டாகியும் வெளியேறினர். இந்த இரு விக்கெட்களையும் அஸ்வின் கைப்பற்றினார். ஷத்மான் இஸ்லாம் 7 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 26 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றுகடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது வங்கதேச அணி. இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து குறைந்த இலக்கை துரத்தி வெற்றி காண்பதில் இந்திய அணி முனைப்புடன் செயல்படக்கூடும்.

3 ஓவரில் 50.. 10.1 ஓவரில் 100: கான்பூர் டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான நேற்று முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அதிரடியாக விளையாடியது. யஷஸ்வி ஜெஸ்வால், ரோஹித் சர்மா ஆகியோரது விளாசலால் 3 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களை தொட்டது. ஹசன் மஹ்முத் வீசிய முதல் ஓவரில் 12 ரன்களும் காலித் அகமது வீசிய அடுத்த ஓவரில் 17 ரன்களும் விளாசப்பட்டன. ஹசன் மஹ்முத் வீசிய 3-வது ஓவரில் 21 ரன்களையும் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி விளாச இந்திய அணி 50 ரன்களை குவித்து சாதனை படைத்தது. இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் டிரென்ட் பிரிட்ஜில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் 50 ரன்களை விளாசியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது இந்திய அணி முறியடித்துள்ளது. ரோஹித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போதிலும் ஷுப்மன் கில் உதவியுடன் ஜெய்ஸ்வால் அதிரடியை தொடர்ந்தார். இதனால் இந்திய அணி 10.1 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக 100 ரன்களை தனது முந்தைய சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2023-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 12.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்திருந்தது.

18 விக்கெட்.. 437 ரன்: கான்பூர் டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான நேற்று மட்டும் 18 விக்கெட்கள் சரிந்தன. ஒட்டு மொத்தமாக வீசப்பட்ட 85 ஓவர்களில் 437 ரன்கள் குவிக்கப்பட்டன.

ரன் விகிதம் 8.22: வங்கதேச அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 285 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி ஓவருக்கு சராசரியாக 8.22 ரன்களை சேர்த்திருந்தது. இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7.53 விகிதத்தில் ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது இந்திய அணி முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஜடேஜா 300: கான்பூரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான நேற்று வங்கதேச பேட்ஸ்மேனான காலித் அகமதுவை (0), இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜடேஜா ஆட்டமிழக்கச் செய்தார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் ஜடேஜா கைப்பற்றிய 300-வது விக்கெட்டாக இது அமைந்தது. இதன் மூலம் 300 விக்கெட்களை வீழ்த்திய 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜடேஜா. அனில் கும்ப்ளே (619), அஸ்வின் (526), கபில்தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), இஷாந்த் சர்மா (311), ஜாகீர் கான் (311) ஆகியோர் 300 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய இந்திய வீரர்களாவர். ஜடேஜா தனது 74-வது போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் அவர், விரைவாக 300 விக்கெட்களையும், பேட்டிங்கில் 3 ஆயிரம் ரன்களை சேர்த்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த வகையில் இங்கிலாந்தின் இயான் போத்தம் (72 ஆட்டங்கள்) முதலிடத்தில் உள்ளார்.

விராட் கோலி 27,000: சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. கான்பூர் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 35 ரன்களை எட்டிய போது இந்த சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் 27 ஆயிரம் ரன்களை கடந்திருந்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது விராட் கோலி முறிடியத்துள்ளார். அவர், 594 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். இது சச்சின் டெண்டுல்கரின் இன்னிங்ஸ்களை விட 29 குறைவாகும். இதுவரை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விராட் கோலி 27,012 ரன்களை வேட்டையாடி உள்ளார்.

96 சிக்ஸர்கள்: இந்த ஆண்டில் இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 96 சிக்ஸர்களை விளாசியுள்ளது. இதன் மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 2022-ம் ஆண்டு இங்கிலாந்து அணி 89 சிக்ஸர்களை விளாசியிருந்தது.

விரைவாக 250: கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 24.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 200 ரன்களை விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 28.1 ஓவரில் 200 ரன்களை கடந்திருந்தது. இதேபோன்று இந்திய அணி 250 ரன்களை 30.1-ஓவரில் எட்டியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 250 ரன்களை குவித்த அணி என்ற சாதனையையும் நிகழ்த்தியது இந்திய அணி. இதற்கு முன்னர் 2022-ம் ஆண்டு ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்து அணி 34 ஓவர்களில் 250 ரன்களை எட்டியிருந்தது.