EBM News Tamil
Leading News Portal in Tamil

தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி: 2-வது நாளில் இந்தியா தங்க வேட்டை | South Asian Junior Athletics championship India hunts gold on Day 2


சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் 4-வது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி நடை பெற்றுவருகிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் உன்னதி ஐயப்பா பந்தய தூரத்தை 13.93 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான சபிதா டாப்போ இலக்கை 13.96 விநாடிகளில் எட்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலங்கையின் சந்துன் கோஷாலா பந்தய தூரத்தை 14.06 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் நயன் பிரதீப் சர்தே (14.14) வெள்ளிப் பதக்கமும், இலங்கையின் விஷ்வா தருகா (14.27) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

மகளிருக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் அனிஷா 49.91 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கமும், அமானத் கம்போஜ் 48.38 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இலங்கையின் கவுராங்கனி (37.95) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஜிதின் அர்ஜூனன் 7.61 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான முகம்மது அட்டா சசித் 7.43 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார். இலங்கையின் துவகே தேவிந்து (7.22) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதில் ஜிதின் அர்ஜூனன் தமிழகத்தின் திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஜெய் குமார் பந்தய தூரத்தை 46.86 விநாடிகளில் எட்டி தங்கம் வென்றார். மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் நீரு பதக் (54.50) தங்கமும், சந்திரா (54.82) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஷாருக் கான் (8:26.06), மோஹித் சவுத்ரி (8:27.61) முறையே தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பிராச்சி அங்குஷ் (9:57.26) தங்கமும், ஷில்பா திஹோரா (10:04.23) வெள்ளியும் வென்றனர். ஆடவருக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் ரித்திக் (55.64 மீட்டர்), ராமன் (51.22) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினர்.

மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் பிரதிக் ஷா யமுனா (5.79) தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான லக்‌ஷன்யா (5.7) வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இவர்கள் இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.