EBM News Tamil
Leading News Portal in Tamil

“முக்கிய பிரச்சினைகளை கவனியுங்கள்!” – ட்ரோல்களுக்கு மேக்ஸ்வெல் மனைவி பதிலடி | Glenn Maxwell’s Wife Vini Raman Hits Back At Trolls


சென்னை: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலரது ட்ரோல்களுக்கு ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (நவ.19) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இந்திய அணியின் தோல்வி எதிரொலியாக ரசிகர்கள் பலரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனுக்கு வெறுக்கத்தக்க மெசேஜ்களை அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவை பூர்விகமாக கொண்டு, இந்திய அணியின் தோல்வியை அவர் கொண்டாடுவதாக ரசிகர்கள் சிலர் வினி ராமனுக்கு சமூக வலைதளங்களில் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இதை சொல்ல வேண்டியதற்கான தேவை எழுந்திருப்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் பிறந்து, வளர்ந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதேசமயம், உங்களின் குழந்தைக்கு தந்தையாக இருக்கும் உங்கள் கணவர் விளையாடும் அணியையும் ஆதரிக்க வேண்டும். உங்களின் சீற்றத்தை உலகில் நிகழும் முக்கியமான பிரச்சினைகளை நோக்கி திருப்புங்கள்” என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மினி ஆஸ்திரேலியாவில் படித்து, கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் கோலாகலகமாக நடைப்பெற்றது. ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துவ முறைப்படியும், தமிழகத்தில் இந்து முறைப்படியும் இவர்களுக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பையின் மீது கால் வைத்தபடி வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கும் விமர்சனங்களும், அந்த விமர்சனங்களுக்கு எதிர்க் கருத்துகளும் நிறைந்து தென்படுகின்றன.