EBM News Tamil
Leading News Portal in Tamil

அனுஷ்கா சர்மா பற்றிய கருத்தால் சர்ச்சை: ஹர்பஜன் சிங்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – என்ன நடந்தது? | Netizens slam Harbhajan Singh for sexist comment at Anushka Sharma, Athiya Shetty during match


புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது அனுஷ்கா மற்றும் அதியா ஷெட்டி குறித்து சர்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ஹர்பஜன் சிங்குக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆறாவது முறையாகக் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த நிலையில், அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அனுஷ்கா சர்மா மற்றும் அதியா ஷெட்டி குறித்து கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது கே.எல்.ராகுலும், விராட் கோலியும் கிரீஸில் இருந்தபோது நடந்தது. விராட் கோலியும், ராகுலும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் மனைவி அதியா ஷெட்டி மீது கேமரா விரைவில் திரும்பியது. அவர்கள் இருவரும் தீவிரமாக ஏதோ ஒன்றைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இந்தியில் கருத்து தெரிவித்த ஹர்பஜன், “அனுஷ்கா சர்மாவுக்கும், அதியா ஷெட்டிக்கும் இடையேயான உரையாடல் கிரிக்கெட் பற்றியா அல்லது திரைப்படங்களை பற்றியா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால், அவர்களுக்கு கிரிக்கெட்டைப் பற்றி எந்த அளவுக்குப் புரிதல் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை” என்றார். இந்தக் கருத்துக்கு பல்வேறு இணையதளவாசிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பலர் இது பெண்களுக்கு எதிராக வெறுப்புக் கருத்து என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், அவர் உடனடியாக இரண்டு நடிகைகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து நெட்டிசன் ஒருவர் குறிப்பிடும்போது, “ஹர்பஜன் சிங் ஏன் அனுஷ்கா மற்றும் அதியா மீது பெண் வெறுப்புக் கருத்தைக் கூறுகிறார்? ‘அவர்கள் கிரிக்கெட் அல்லது திரைப்படங்களைப் பற்றிப் பேசுகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை, அவர்களுக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாது என்று நான் நினைக்கிறேன்’ என அவர் பேசும்போது வர்ணனையில் உள்ள மற்றவர்கள் எதிர்வினை ஆற்றாதது ஏன்?” என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயனர், “அவர்கள் கிரிக்கெட் அல்லது திரைப்படங்களைப் பற்றிப் பேசுகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை, அவர்களுக்கு கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் தெரியாது என்று நான் நினைக்கிறேன் என ஹர்பஜன் கூறுவது சரியானதாகப் படவில்லை. அதை அவர் கூலாக சொன்னதாகவும் எனக்குத் தோன்றவில்லை” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “ஹர்பஜன் சிங் தன்னுடைய பெண் வெறுப்புக் கருத்துக்காக மன்னிப்பு கேட்டாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.