EBM News Tamil
Leading News Portal in Tamil

கோப்பை வழங்கும் நிகழ்வில் பாட் கம்மின்ஸை ‘கண்டுகொள்ளாமல்’ நகர்ந்தாரா பிரதமர் மோடி? – சர்ச்சையும் உண்மையும் | ODI WC Final Did PM Modi ignore Pat Cummins after awarding the trophy


அகமதாபாத்: 2023 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸிடம் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடவே, அதுகுறித்த சர்ச்சை ஒன்றும் இலவச இணைப்பாக வலம் வருகிறது. அந்த சர்ச்சை குறித்தும், அதன் உண்மைத் தன்மை குறித்தும் பார்ப்போம்.

என்ன சர்ச்சை? – உலகக் கோப்பையை வழங்கியப் பின்பு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸியை பிரதமர் மோடி அவமதித்து, நிராகரித்துச் சென்றதாக இணையவாசிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், அந்த ‘துண்டு’ வீடியோவுடன் ‘இந்தியா தன்னளவில் தான் ஒரு மோசமான நிகழ்ச்சி நடத்துநர் என்று நிரூப்பித்துள்ளது” என்ற வாசகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை 4,00,000-க்கும் அதிகமானோர் பார்த்திருந்தனர்.

கம்மின்ஸை நிராகரித்தாரா பிரதமர் மோடி>? – ஆஸ்திரேலிய அணி கேப்டனை பிரதமர் மோடி நிராகரித்ததாக கூறப்படும் செய்தி என்பது உண்மைக்குப் புறம்பான ஒன்று. இதற்கான ஆதாரத்தை வழங்குகிறது ஒரு எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ள கோப்பை பரிசளிப்பு விழா குறித்த வீடியோ ஒன்று. நவ.20-ம் தேதி பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், “வாழ்த்துகள் ஆஸ்திரேலியா, பிரதமர் மோடி உலகக் கோப்பையை ஒப்படைக்கும் எடிட் செய்யப்படாத வீடியோ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் ஆஸ்திரேலிய அணி கேப்டனிடம் 2023 உலகக் கோப்பையை கொடுக்கும் பிரதமர் மோடி, இன்முகத்துடன் கம்மின்ஸுடன் கை குலுக்குகிறார். அதன் பின்னர் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய துணை பிரதமரும் மேடையை விட்டு நகர்ந்து ஆஸ்திரேலிய அணியின் மற்ற வீரர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி நகர்ந்ததும் கம்மின்ஸ் கோப்பையுடன் மேடையில் சிறிது நேரம் தனியாக நிற்கிறார். இதில், கம்மின்ஸை பிரதமர் மோடி நிராகரித்ததற்கான எந்த ஒரு நோக்கமும் சான்றும் இல்லை. இதேபோல், உலகக் கோப்பை நிகழ்வு குறித்த புகைப்படங்களில் வெற்றிக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி கேப்டனிடம் ஒப்படைத்த பின்னர் அவருடன் பிரதமர் மோடி கைகுலுக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

நடந்தது என்ன? – உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பின்னர், இருநாட்டு தலைவர்களிடமிருந்தும் வெற்றிக் கோப்பையை பெறும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைவர்கள் இருவரும் மேடையில் இருந்து இறங்கிய பின்னரும் தனது அணியினரின் வருகைக்காக மேடையில் சிறிது நேரம் தனியாக காத்திருக்கிறார். தலைவர்களிடம் வாழ்த்து பெற்றதும் அணித் தலைவருடன் இணைந்து கொள்ளும் ஆஸ்திரேலிய வீரர்கள் அதன் பின்னர் மேடையில் வெற்றிக் களிப்பைக் கொண்டாடுகின்றனர். இதனிடையே, கோப்பையை ஒப்படைத்த பின்பு தொடங்கி தலைவர்கள் இருவரும் மேடையை விட்டு இறங்கும்போது கம்மின்ஸ் தனியாக நிற்கும் சில விநாடிகள் வரையிலான காட்சிகள் மட்டும் பகிரப்பட்டு நடக்காத ஒரு தகவல் நடந்ததாக தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது.

2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி: முன்னதாக ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பின் இறுதி ஆட்டம் 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை, 2 முறை சாம்பியனான இந்தியா எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 240 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

241 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஆடுகளத்தை சரியாக கணித்து பந்து வீச்சிலும், மட்டை வீச்சிலும் அசத்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. லீக் சுற்றில் முதல் 2 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. அதன் பிறகு விஸ்வரூபம் எடுத்து இந்த வெற்றிக்கனியை பெற்றுள்ளது. இந்தத் தொடரின் எந்த ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை பறிகொடுத்து கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.