ODI WC 2023 | பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் | Pakistan informs ICC after visa delay issue for India travel disrupt their ODI World Cup plan
கராச்சி: உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வருவதில் பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
அதன்படி, அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. இதன்பின் மிகுந்த எதிர்பார்ப்புக்குட்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளுக்கு இந்தியா சார்பில் விசா தரப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணிக்கு மட்டும் இன்னும் விசா வழங்கப்படவில்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.
செப்டம்பர் 29 அன்று நியூசிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பை தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணி அதற்கு முன்னதாக துபாய் சென்று அங்கு சில நாட்கள் அனைத்து வீரர்களும் நேரம் செலவழிக்கும் வகையில் திட்டமிட்டிருந்தது. துபாய் பயணத்தை முடித்துவிட்டு நேரடியாக ஹைதராபாத் வந்து உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தது. அதற்கேற்ப ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாடிநாடு திரும்பியதும் இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், இந்தியா சார்பில் இன்னும் விசா அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து ஐசிசியில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் விசா தொடர்பாக முறையிட்டுள்ளது. விசா தாமதம் ஆவதால் துபாய் முகாமை ரத்து செய்துவிட்டு அடுத்த வாரம் நேரடியாக இந்தியா வர தீர்மானித்திருப்பதாக ஐசிசியிடம் தெரிவித்துள்ளது பாகிஸ்தான் அணி.