EBM News Tamil
Leading News Portal in Tamil

உலக தடகள கூட்டமைப்பின் துணைத் தலைவராக சுமரிவாலா தேர்வு | Adille Sumariwalla selected as vice-president of the World Athletics Federation


புடாபெஸ்ட்: உலக தடகள கூட்டமைப்பின் 4 துணைத் தலைவர்களில் ஒருவராக இந்திய தடகள சங்கத்தின் தலைவர் ஆதில் சுமரிவாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் வலிமையான உலக தடகள நிர்வாகக் குழுவில் இடம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுமரிவாலா.

உலக தடகள கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் தலைவராக பிரிட்டனை சேர்ந்த செபாஸ்டியன் கோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2015 முதல் செபாஸ்டியன் கோ தலைவராக செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள் கொண்டது.

உலக தடகள கூட்டமைப்பின் விதிகளின் படி 4-வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது. இதனால் 66 வயதான செபாஸ்டியன் கோ, தலைவராக பதவி வகிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும். துணைத் தலைவர்களாக இந்திய தடகள சங்கத்தின் தலைவர் ஆதில் சுமரிவாலா, கென்யா தடகள சங்கத்தின் தலைவர் ஜாக்சன் டுவி, கொலம்பியாவின் ஸிமெனா ரெஸ்ட்ரேபோ, ஸ்பெயினின் ரால் சாபடோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவர் பதவிக்கு 8 பேர் போட்டியிட்ட நிலையில் சுமரிவாலா உள்ளிட்ட 4 பேரும் அதிக அளவிலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர். 65 வயதான சுமரிவாலா, துணைத் தலைவர் பதவியில் 4 வருடங்கள் இருப்பார். துணைத் தலைவர்களாக தேர்வாகி உள்ள 4 பேரும், உலக தடகள கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவில் இடம் பெறுவார்கள்.

இதன் மூலம் வலிமையான உலக தடகள நிர்வாகக் குழுவில் இடம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுமரிவாலா. நிர்வாகக் குழுவில் தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், மூன்று நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். இந்த குழுவே அனைத்து வகையிலான உயர்மட்ட முடிவுகளையும் எடுக்கும். – ஏஎப்பி.