EBM News Tamil
Leading News Portal in Tamil

“அணியாக இணைந்து கோப்பை வெல்வதே முக்கியம்” – மெஸ்ஸி | most important thing is to win trophies together as a team lionel Messi


புளோரிடா: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான மெஸ்ஸி, மேலும் ஒரு கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். அது இன்டர் மியாமி கிளப் அணிக்காக வெல்லும் கோப்பையாக இருக்கும்.

கடந்த 12 மாதங்களில் உலகக் கோப்பை, கோல்டன் பால் விருது மற்றும் பிஎஸ்ஜி அணிக்காக 51 கோல் பங்களிப்பு (30 கோல்கள், 21 அசிஸ்ட்கள்) என அட்டகாசமாக ஆடுகளத்தை அதகளப்படுத்தி வருகிறார் லயோனல் மெஸ்ஸி. தற்போது இன்டர் மியாமி கிளப் அணிக்காக 9 கோல்களை லீக் கோப்பை தொடரில் இதுவரை பதிவு செய்துள்ளார்.

அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் கோப்பை வென்றுள்ளார். உலகக் கோப்பை உட்பட மொத்தம் 43 கோப்பைகளை அவர் வென்றுள்ளார். 36 வயதான அவர் Ballon d’Or விருதை 7 முறை வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது இது.

“Ballon d’Or விருது மிகவும் முக்கியமான விருது தான். ஏனெனில் அது வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம். ஆனால், நான் அது குறித்து அதிகம் நினைப்பதில்லை. அணியாக இணைந்து கோப்பை வெல்வதே முக்கியம். எனது எண்ணமெல்லாம் அதில் தான் இருக்கும். நான் எனது கேரியரில் வைத்திருந்த அனைத்து இலக்குகளையும் அடைந்துள்ளேன். இப்போது எனது கிளப் அணிக்காக புதிய இலக்கை கொண்டுள்ளேன். அதற்காக தான் இங்கு உள்ளேன்.

எனது மூன்று மகன்களுடன் இணைந்து தற்போது மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை பார்த்து வருகிறேன். கோல் பதிவு செய்ததும் மார்வெல் சூப்பர் ஹீரோ போல கொண்டாட அது தான் காரணம். (கோல் பதிவுக்கு பிறகு தனது கொண்டாட்ட முறையை மெஸ்ஸி மாற்றியுள்ளார்). எனது வெற்றியை தொடர விரும்புகிறேன்” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

நாஷ்வில் கிளப் அணிக்கு எதிராக இன்டர் மியாமி அணி லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.