EBM News Tamil
Leading News Portal in Tamil

ஓய்வு முடிவில் மாற்றம்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார் பென் ஸ்டோக்ஸ் | retirement plan changed Ben Stokes returns to ODI cricket


லண்டன்: ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்டு உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பி உள்ளார் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக விளையாடுவது சாத்தியம் இல்லாதது எனக்கூறி குறுகிய வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதேவேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை அபாரமாக வழிநடத்தி வந்தார்.

சமீபத்தில் முடிவடைந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பென் ஸ்டோக்ஸின் செயல் திறன் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மேத்யூ மோட் கோரிக்கை வைத்திருந்தார். இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் பென் ஸ்டோக்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன் முடிவில், உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்க பென் ஸ்டோக்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது உள்நாட்டில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. 4 டி20 ஆட்டங்கள், 4 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்: ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.