மீண்டும் கோல் பதிவு செய்த மெஸ்ஸி: இறுதிக்கு முன்னேறியது இன்டர் மியாமி அணி | Messi scored a goal again Inter Miami advanced to the final
பென்சில்வேனியா: தனது புதிய கால்பந்து கிளப் அணிக்காக இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடி 9 கோல்களை பதிவு செய்துள்ளார் மெஸ்ஸி. பிலடெல்பியா யூனியன் அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரரும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனுமான மெஸ்ஸி, தற்போது அமெரிக்க நாட்டின் கால்பந்து கிளப் அணியான இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த மாதம் தான் தனது முதல் போட்டியில் அந்த அணிக்காக அவர் விளையாடி இருந்தார். அந்த அணி தற்போது லீக்ஸ் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி 9 கோல்களை பதிவு செய்துள்ளார்.
பிலடெல்பியா யூனியன் அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார். அதுவும் கோல் போஸ்டுக்கு 30 யார்டுகளுக்கு வெளியில் இருந்து மிகவும் கூலாக பந்தை தட்டிவிட அது கோல் ஆனது. மியாமி அணிக்காக 3-வது நிமிடத்தில் மார்ட்டினஸ், 48-வது நிமிடத்தில் அல்பா, 84-வது நிமிடத்தில் டேவிட் ரூய்ஸ் ஆகியோர் கோல் பதிவு செய்தனர். பிலடெல்பியா யூனியன் அணி ஒரு கோலை மட்டுமே பதிவு செய்தது. ஆட்ட நேர முடிவில் 4-1 என்ற கணக்கில் இன்டர் மியாமி அணி வெற்றி பெற்றது.
வரும் சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டி இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாடும் 10-வது போட்டியாக அமைந்துள்ளது.