அல் ஹிலால் சவுதி கால்பந்து கிளப்பில் இணைந்தார் பிரேசில் வீரர் நெய்மர் | Brazilian player Neymar joins Saudi football club Al Hilal
பிரேசிலியா: பிரேசில் கால்பந்து அணி வீரரும், உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவருமான நெய்மர், விரைவில் அல்-ஹிலால் கால்பந்து கிளப் அணியில் இணைந்துள்ளார்.
இதுதொடர்பான தகவல் சவுதி அரேபியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை அல்-ஹிலால் கால்பந்து அணிக்காக நெய்மர் விளையாடுவார் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் அவர் விரைவில் கையெழுத்திடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் அல்-ஹிலால் அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
2025-ல் உலக கால்பந்து சம்மேளனம் (பிபா) நடத்தும் உலகக் கோப்பை கிளப் கால்பந்துப் போட்டியில் அல்-ஹிலால் அணிக்காக நெய்மர் விளையாடுவார். இந்த போட்டி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே சவுதி அரேபியாவில் உள்ள பிரபல கால்பந்து கிளப்களில் உலகின் முன்னணி கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானா ரொனால்டோ (போர்ச்சுக்கல்), கரீம் பென்செமா (பிரான்ஸ்) ஆகியோர் இணைந்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது நெய்மரும் சேர்ந்துள்ளார்.