மறக்குமா நெஞ்சம் | இதே நாளில் கடந்த 1990-ல் முதல் சதத்தை பதிவு செய்த சச்சின்! | Sachin tendulkar scored his first century in 1990 on this day in england
மான்செஸ்டர்: கடந்த 1990-ல் இதே நாளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவு செய்திருந்தார் முன்னாள் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர். இங்கிலாந்து மண்ணில் பதிவு செய்யப்பட்ட சதம் அது.
அப்போது சச்சினுக்கு 17 வயதுதான். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இளம் வயதில் சதம் பதிவு செய்த வீரர்களில் ஒருவர் ஆனார். அதன் பிறகு கிரிக்கெட் உலகில் மேலும் 99 சதங்களை அவர் பதிவு செய்வார் என யாருமே அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தனது 9-வது டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை சச்சின் பதிவு செய்திருந்தார்.
அதுவும் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் 189 பந்துகளை எதிர்கொண்டு 119 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் மூலம் அந்தப் போட்டியை சமனில் முடித்தது இந்திய அணி. மொத்தம் 17 பவுண்டரிகள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். அதற்காக ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். அதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பெற்ற முதல் ஆட்ட நாயகன் விருது. சுமார் 225 நிமிடங்கள் களத்தில் பேட் செய்திருந்தார் சச்சின்.
“ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று நான் எனது முதல் சதத்தை பதிவு செய்தேன். அடுத்த நாள் நமது சுதந்திர தினம் என்பது அது சிறப்பு. அது தலைப்பு செய்தியானது. அந்த சதம் ஓவலில் நாங்கள் விளையாடிய அந்த தொடரின் அடுத்த டெஸ்ட் வரை பேசப்பட்டது” என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதல் சதம் குறித்து சச்சின் தெரிவித்திருந்தார்.
இந்திய அணிக்காக 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் விளையாடி உள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் இதில் அடங்கும். 34,357 ரன்கள் மற்றும் 201 விக்கெட்டுகளை சச்சின் கைப்பற்றி உள்ளார். அதன் மூலம் 100 சதங்களை பதிவு செய்துள்ளார்.
#OnThisDay in 1990, a 17-year-old Sachin Tendulkar hit his maiden Test hundred and the rest is history …
Which is your favourite from the Master Blaster? pic.twitter.com/SPwjYhEUrM
— ICC (@ICC) August 14, 2020