‘இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஆலோசனையை பின்பற்றுகிறேன்’ – யஷஸ்வி ஜெய்ஸ்வால் | Following the advice of senior players of team India Yashasvi Jaiswal
லாடர்ஹில்: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களின் ஆலோசனையை பின்பற்றி நடந்து வருகிறேன் என்று தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி போன்று ஆடுகிறீர்கள் என்று என்னையும், ஷுப்மன் கில்லையும் ஒப்பிட்டு சிலர் பேசி வருகின்றனர். ரோஹித் சர்மா, ஷிகர் தவண் போன்ற வீரர்கள் மிகவும் மூத்தவர்கள். அணிக்காக நிறைய சாதனைகளைச் செய்துள்ளனர். அவர்கள் ஜாம்பவான்களாக வலம் வருகின்றனர்.
நாங்கள் தற்போதுதான் அணிக்கு வந்துள்ளோம். இன்னும் நீண்ட காலம் பயணிக்க வேண்டியுள்ளது. நான் அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி விளையாடி வருகிறேன். எனக்குத் தேவையான ஆலோசனையை அவர்களிடமிருந்து பெறுகிறேன். அவர்கள் அனைவரும் எங்களின் மூத்த சகோதரர்கள் போன்றவர்கள். அவர்களின் அனுபவங்கள் எங்களுக்குப் பாடங்களாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.