WI vs IND | இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது மே.இ.தீவுகள் அணி | West Indies won t20i cricket series against team india
புளோரிடா: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது டி20 போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 போட்டிகள் மேற்கு இந்தியத் தீவுகளிலும், கடைசி 2 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவிலும் நடைபெற்றது.
இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. அடுத்த 2 போட்டிகளை இந்திய அணி வென்றது. தொடரின் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா, 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மேற்கு இந்தியத் தீவுகள் அணி விரட்டியது. 10 ரன்களில் கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் நிக்கோலஸ் பூரன் மற்றும் பிராண்டன் கிங் இணைந்து 107 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பூரன், 35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து திலக் வர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
18 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. அதன் மூலம் தொடரையும் வென்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கிங், 55 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தார். தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரன் தொடர் நாயகன் விருதை வென்றார்.
Whatever he touches turns to gold
Tilak Varma can’t do no wrong as he picks up the big wicket of Nicholas Pooran #WIvIND #SabJawaabMilenge #JioCinema pic.twitter.com/5lFHAP4lml
— JioCinema (@JioCinema) August 13, 2023