கேமராவுடன் பேசுவேன்… கொக்கு போல் காத்திருப்பேன்… – விளையாட்டுத்துறை போட்டோகிராபியின் சவால் பகிரும் எல்.ராமச்சந்திரன் | L. Ramachandran shares the challenge of sports photography
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. களத்தில் வீரர்கள் எந்த அளவுக்கு பரபரப்பாக இருந்தார்களோ அதற்கு மேல் சுழன்று கொண்டிருந்தார் சர்வதேச புகைப்பட கலைஞரான எல்.ராமச்சந்திரன். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர், பிளேபாய், மாக்சிம் போன்ற இதழ்களில் பணியாற்றி உள்ளார்.
புகைப்படம் தொடர்பாக 4 புத்தகங்களை எழுதியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. 2019 -ம் ஆண்டில், நான்கு மணி நேரத்தில் அதிக முகங்களை வரைந்ததற்காக அவர் தனது குழுவுடன் கின்னஸ் உலக சாதனையும் படைத்திருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர். அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘தி ஆர்ட்டிஸ்ட்’ என்ற தலைப்பில் வெளிட்ட தொகுப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.
பேஷன் போட்டோ கிராபி, ஆர்ட் போட்டோ கிராபி, கட்டிடக்கலை போட்டோ கிராபி, செலிபிரிட்டி போட்டோ கிராபி, கிளாமர் போட்டோ கிராபி என பல துறைகளில் பயணித்து வந்த எல்.ராமச்சந்திரன், தற்போது விளையாட்டுத்துறை போட்டோ கிராபியிலும் பிரகாசிக்க தொடங்கி உள்ளார். ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மின்னல் வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்த அவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை…
பொதுவாகவே போட்டோ கிராபியில் இன்றைய நிலையில் பலவிதமான வகை வந்துவிட்டது. விளையாட்டுத்துறையிலும் அந்த நிலையேஉள்ளது. போட்டோ கிராபியில் எல்லாவற்றுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. பேஃஷன் போட்டோகிராபி என்றால் இன்டோர், அவுட்டோர் எனஷாட் பிரித்து எடுப்போம். லைட்டிங் மிகவும் முக்கியம். அதேபோன்று மேக்கப், மெட்டீரியல் முக்கியம்.
காஸ்ட்யூம் முக்கியம். நம்முடன் பணிபுரியும் பிரபலம் எந்த அளவு ஈடுபாட்டுடன் பணிபுரிகிறார் என்பதும் முக்கியம். ஒவ்வொரு போட்டோகிராபிக்கும் ஏதோ பொருள் ஒன்று அழகு சேர்க்கும். பொதுவான போட்டோ கிராபி, செலிபிரிட்டி போட்டோ கிராபி, பேஷன் போட்டோ கிராபி, வைல்டு லைஃப் போட்டோ கிராபி ஆகியவற்றை தாண்டி விளையாட்டு போட்டோ கிராபிக்கு முக்கியமானது ஷட்டர்தான். ஷட்டர் வழியாக ஒளி புகும் நேரம்தான் முக்கியம்.
ஏனெனில் விளையாட்டில் அனைத்தும் நகர்வில் இருக்கும். கோல் அடிக்கும் வேகம் மின்னல் போன்று இருக்கும். அந்த வேகத்தை ஷட்டர்தான் கட்டுப்படுத்தும். விளையாட்டு போட்டோகிராபியை பொறுத்தவரை நாம் எடுக்கும் ஒவ்வொரு போட்டோவையும் நிதானமாக நிறுத்தி ஒரு லைனில் கொண்டுவர வேண்டுமென்றால் நம்முடைய கண்களை வீரர்களை நோக்கி இருக்க வேண்டும். கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது.
உதாரணமாக செஸ் ஒலிம்பியாட் எடுத்தோம். அங்கு வீரர்கள் தலையில் கையை வைத்துக்கொண்டு கண்களை லட்சம் முறை நகர்த்துவார்கள். அவர்களை நாம் நேராக படம் எடுக்க முடியாது. ஏனெனில் அவர்கள் கிட்டத்தட்ட தங்களை முகத்தை இருபுறமும் கைகளால் மறைத்து இருப்பார்கள். மேலும் அங்குள்ள லைட்டிங், அவர்களது கண்களில் நிழல்களை உருவாக்கிவிடும். அதற்கு ஒரு பொசிஷன் தேவைப்படும்.
ஆனால் ஏற்கெனவே பலதுறைகளில் பயணித்ததால் விளையாட்டுத்துறை போட்டோ கிராபி என்பது பெரிய அளவிலான சவாலாக தெரியவில்லை. ஒவ்வொரு துறையிலும் ‘டெப்த் ஆப் பீல்டு’ என்பது முக்கியம். போட்டா கிராபி துறையிலும் எந்தெந்த போட்டோவுக்கு என்ன விஷயங்கள் தேவை என்பதை ஆழமாகவும், அழகாகவும், தெளிவாகவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்போது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி சென்று கொண்டிருக்கிறது.
விளையாட்டு துறையில் போட்டோ எடுக்கும் போது நான், கேமராவிடம் பேசுவது ஒன்றே ஒன்றுதான். நான் உன்னால், எதிரே இருக் கும்நபரை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும். அதற்கு நல்ல போட்டோ கிடைக்கும் என்றுகூறியபடிதான் கேமரா மேல் கை வைப்பேன். அப்போது எனக்கும் கேமராவுக்கும் மனநிலைஒன்றிவிடும். இதே மனநிலையை எதிரேஇருக்கும் விளையாட்டு வீரரிடம் சொல்லாமல்தான் சொல்வோம்.
உடலுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ, அதுபோன்றுதான் போட்டோ கிராபருக்கு கேமராவும். நாம் அதை அந்த அளவுக்கு நேசிக்க வேண்டும். எதை நேசிக்கிறோமோ, அதுதான் நம்மை வந்து சேரும்.