EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி – மலேசியாவை வீழ்த்தி பட்டம் வென்றது இந்திய அணி | Asian Champions Trophy Hockey – Team India beat Malaysia to win the title


சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் பட்டம் வென்று அசத்தியுள்ளது இந்திய அணி. மலேசியாவை 4 – 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் காலிறுதியில் ஜுக்ராஜ் சிங் கோலடித்து இந்தியாவை ஆரம்பத்திலேயே முன்னிலைப்படுத்தினார். சில நிமிடங்களில் மலேசியாவின் கமல் அபு அர்சாய் கோல் அடித்து 1-1 என்று சமன் செய்தார். பின்னர் மலேசியாவின் ரஸி ரஹீம் மற்றும் அமினுதின் முஹமட் ஆகியோர் பெனால்டி கார்னரை கோலாக மாற்ற, 3-1 என்று கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஒருகட்டத்தில் 3 – 1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய அணி கடைசி 17 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், குர்ஜந்த், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றியின் மூலம், நான்காவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பட்டத்தை வென்றது. இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

முன்னதாக, இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 19-வது இடத்தில் உள்ள ஜப்பானுடன் மோதியது. இதில் முதல் பாதியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. 2-வது கால் பகுதியில் இந்திய அணி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது. இதனால் முடிவில் இந்திய அணி 5 -0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தது. இறுதி வரை போராடியும் ஜப்பான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது.