விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டம்
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மத்திய அரசுடன் நடத்திய 10 சுற்று பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்கவில்லை.
இதற்கிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி கவர்னர் அனில் பைஜால் அனுமதி அளித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடையும் ஆகஸ்டு 13-ந் தேதிவரை போராட்டம் நடத்த விவசாயிகள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், ஆகஸ்டு 9-ந் தேதிவரை போராட்டம் நடத்த கவர்னர் அனுமதி அளித்தார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று 40 விவசாய சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி விவசாயிகள் போராட்டம் நேற்று தொடங்கியது. மாலை 5 மணிவரை அவர்கள் போராட்டம் நடந்தது. இதுபோல், ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை 200 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆகஸ்டு 9-ந் தேதிவரை போராட்டம் நடக்கிறது. விவசாயிகள் போராட்டம் காரணமாக ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.