ஆகஸ்டு மாதம் முதல் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு செய்துள்ளன
பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கும் நோக்கிலும் சர்வதேச பொருளாதாரத்தின் மீதுள்ள அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கிலும், ஆகஸ்டு மாதம் முதல் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு செய்துள்ளன.
இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதிகபட்ச விலையை கச்சா எண்ணெய் எட்டியுள்ள சூழலில் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் ரஷ்யா ஆகியவை இந்த முடிவை எட்டியுள்ளன.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவையின் விலையும் உலகெங்கும் அதிகரித்தன. உற்பத்தி அதிகரித்து கச்சா எண்ணெய் விலை குறைந்தால், இவற்றின் விலையும் குறைய வாய்ப்புண்டு.
ஆனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் கொள்முதல் விலை எந்த அளவு குறைகிறதோ, அதே அளவுக்கு வரியை அந்தந்த நாடுகளின் அரசுகள் அதிகரித்தால், கச்சா எண்ணெய் விலை குறைவதன் பலனை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியாது. எனினும், மக்களிடம் இருந்து பெறப்படும் கூடுதல் வரியால் அரசுக்கு வருமானம் அதிகமாகும்.