EBM News Tamil
Leading News Portal in Tamil

குடிமக்களைப் பாதுகாப்பது கடமை; கொல்ல வரும் தீவிரவாதியிடம் அகிம்சையை பேச முடியாது- அமைச்சர் அருண் ஜேட்லி ஆவேசம்

நாட்டில் உள்ள சாமானியக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் ஆகியோர் தீவிரவாதிகளால் அண்மையில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, தனது முகநூல் பக்கத்தில் அருண் ஜேட்லி நேற்று கூறியிருப்பதாவது:
நாட்டின் இறையாண்மையை மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடிமக்களின் உயிர் வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பதும் ஓர் அரசின் தலையாய கடமையாகும். அந்த வகையில், மக்களின் உயிரையும், உடைமைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளிடம் நாம் அகிம்சையைக் கடைப்பிடிப்பது சரியாக இருக்காது.
தனது உயிரை மாய்த்துக் கொண்டாவது, மற்றவர்களின் உயிரை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வரும் தீவிரவாதிகளை எவ்வாறு கையாள்வது? அதுபோன்ற தீவிரவாதிகளைச் சமாதானப்படுத்தி, அவர்களுடன் பாதுகாப்புப் படையினர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்குமா?
சரணடையவும், போர் நிறுத்தத்தை ஏற்கவும் மறுக்கும் தீவிரவாதிகளைச் சத்யாகிரஹம் மூலமாக கையாள்வது சரியாக இருக்காது. மாறாக, அவர்களை இரும்புக்கரம் கொண்டு மட்டுமே ஒடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான், குடிமக்களை நம்மால் பாதுகாக்க முடியும். காஷ்மீர் மக்கள் தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபட வேண்டும், தரமான வாழ்க்கை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். இவ்வாறு ஜேட்லி கூறியுள்ளார்.