EBM News Tamil
Leading News Portal in Tamil

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் வழங்க சில வழிகாட்டுதல்கள்: உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வழிகாட்டுதல்களை சென்னை உயர்நீதிமன்றம் வகுத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருந்து நேரடியாக வழங்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய 48 மணிநேரத்திற்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்வு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் போதும் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கட்டுப்பாடுகள் இல்லாமல் உணவு வழங்கும்போது கொரோனா பரவல் அதிகமாகும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் குறிப்பிட்டார். ஒருவருக்கு கொரோனா வந்தால் ஏராளமானோருக்கு பாதிப்பு சென்று தமிழக அரசின் மீது குற்றச்சாட்டு வரும் என்றும் அவர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நிவாரணப் பொருள் வழங்குவது குறித்து 48 மணிநேரத்திற்கு முன் அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும் என உத்தரவிட்டனர்.

நிவாரணப் பொருட்களுடன் வாகன ஓட்டுனர் உள்பட 4 பேர் மட்டும் செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். நிவாரணம் வழங்குவோர் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும் நீதிபதிகள் வெளியிட்டனர்.