கொரோனா அச்சுறுத்தல்: வைரஸ்தொற்றுத் தடுப்பு பணியில் தன்னார்வலர்களாக திருநங்கைகள்..!
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் திருநங்கைகள் தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வருகிற மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்து உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவை தவிர பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இருப்பினும் ஊரடங்கை மீறி பலர் வெளியே சுற்றுவது இன்றும் தொடர்கிறது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக 15-ஆம் தேதி மாலை வரை 2, 158 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 13,268 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடை மற்றும் வங்கி கிளைகள், ஏடிஎம் மையங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதனை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணியில் காவல் துறையினருடன் என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் தனியார் பாதுகாவலர்களையும் போலீசார் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பாகூர் கிராமத்தில் இப்பணிக்காக திருநங்கைகளும் காவல் நிலையத்தில் விண்ணப்பம் பதிவு செய்தனர்.
அவர்களையும் கொரோனா தடுப்பு பணியில் போலீசார் களமிறக்கியுள்ளனர். பாகூர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை போலீசார் உதவியுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் சுற்றித்திரியும் நபர்களை எச்சரித்தும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வரவேண்டும். அப்படி வெளியே வரும்போது முகக்கவசம் அணியும் படியும் அறிவுறுத்துகின்றனர்.
இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது,”கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாகூர் காவல் நிலையத்தில் தன்னார்வலர் பணியில் சேர அணுகினோம். அதற்கு போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீட்டை விட்டு வெளியே வருவோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் வெளியே வரவேண்டும் என்று போலீசாருடன் இணைந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம்” என்றனர்.