EBM News Tamil
Leading News Portal in Tamil

ஜாமினில் விடுவிக்கக் கோரி திருச்சி சிறையில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்!

திருச்சி மத்திய சிறையில் இலங்கை தமிழர்கள் இன்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை இடைக்கால ஜாமினிலாவது விடுதலை செய்ய கூறிக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குககளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள், 53 பேர், ரஷ்யா, வங்கதேசம், பல்கேரியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 21 பேர் என மொத்தம் 74 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இலங்கை தமிழர்கள், பொய் வழக்கில் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தங்களை, தண்டனைக்காலம் முடிந்தும் இங்கு அடைத்து வைத்திருப்பதாக’ குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ‘கொரோனா ஊரடங்கால் உதவியின்றி தவிக்கும் குடும்பத்தினரோடு வாழ அனுமதிக்க வேண்டும்.

அதற்கு தங்களை இடைக்கால பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கைத் தமிழர்கள் தீபன், முகுந்தன், சுதர்சன், பிரகாஷ் உள்ளிட்ட 30 பேர் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவர்களிடம் தனித்துணை ஆட்சியர் சுதந்திரராஜ், காவல் உதவி ஆணையர் மணிகண்டன், க்யூ பிரிவு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடன்பாடு ஏற்படாததால் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. பிற்பகலுக்கு பிறகு ரஷ்யா, வங்கதேசம் உள்ளிட்ட பிற நாட்டினர் 21 பேரும் போராட்டத்திற்கு ஆதரவளித்து, அவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.